முதல்வரை கண்கலங்க வைத்த சார்லி 777 : வெளியான அதிரடி அறிவிப்பு
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று ‛சார்லி 777' என்கிற படம் வெளியானது. பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் நாய்க்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாயின் ஆசை என்னவாக இருக்கும் என்று அதை வளர்க்கும் மனிதன் உணர்ந்து பல சிரமங்களுக்கு இடையே அந்த ஆசையை நிறைவேற்றி வைக்க முயற்சி எடுக்கும் மனிதாபிமானம் பற்றி இந்த படம் பேசியிருந்தது.
இந்த படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவரது கண்கள் கலங்கி இருந்தன. மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை என்னுடைய செல்ல பிராணியாக நான் வளர்த்த சன்னி என்கிற நாயை நினைவுபடுத்தியது. நாய்க்கும் மனிதனுக்குமான அன்பு எந்தவித எல்லையும் இல்லாதது. இந்த படத்தைப் பார்த்ததும் தெரு நாய்களை தத்தெடுத்து பராமரித்து பாதுகாக்கும் முயற்சியை எடுத்து இருக்கிறேன். அதேபோல நாய் பயிற்சியாளர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக சில திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.