கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் பெரும் வசூல் சாதனைகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் விக்ரம் படத்தின் வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த வெற்றி விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எல்லாரும் யூனிவெர்ஸ்னு சொல்லும்போதும் கொஞ்சம் பயமா இருக்கு. இது கமல் சார் கொடுத்த இடம். காரணம் இந்த படத்தோட தயாரிப்பாளர், என்னோட ஹீரோ, நான் சின்ன வயதிலிருந்து பார்த்த என்னோட ரோல் மாடல் என இந்த மூன்றும் சேர்ந்திருந்தார் கமல் சார். எனவே அவருக்கு படம் பண்ணும்போது சாதாரணமாக பண்ணமாட்டேன். இத்தனைக் கதாபாத்திரங்களைப் படத்தில் கொண்டுவந்து, புதுமுயற்சியுடன் படம் பண்ணுவதற்கு முழு சுதந்திரம் கொடுத்தது கமல் சார்தான்.
படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர் எனக்கு கத்துக்கொடுத்திருக்கிறார். எனவே இப்படத்திற்கு நான் உண்மையாக இருந்து பணியாற்றினேன். படம் வெற்றி பெற்றவுடன் கமல் சார் எனக்குக் கொடுத்த அட்வைஸ், “உன்னுடைய பணி வெற்றிபெற்றது. உன் வேலை முடிந்தது. எனவே உடனே ஆபிஸ் சென்று அடுத்த வேலையைப் பார். அடுத்த படத்திற்கு அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளதே” என்றார். படம் பெரிய வெற்றிபெற்றுள்ளது. அதனால் அடுத்த படத்திற்கு எளிதாக வேலை செய்துகொள்ளலாம் என்றில்லாமல் இன்னும் அதிகமாக உழைப்பேன்” என்று கூறியுள்ளார்.