ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட தடை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதனை செய்யாவிட்டால் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் பதவி விலகி, இடைத் தேர்தல் வருவதற்கு காரணம் ஆனதற்காக அபராதம் விதிக்கும் படி, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, கடந்த 2004ஆம் ஆண்டு பரிந்துரை செய்ததை மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலாளர் இடம், தலைமை தேர்தல் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதில் 6 திருத்தங்களை செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி,
* ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுவதை தடை செய்தல்,
* தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்தல்,
* 18 வயது நிறைவடைந்தவர்களை 4 தகுதி காண் நாட்களை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில் சேர்த்தல்,
* வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தல்,
* கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான அதிகாரம்,
* ரூ.2000-த்திற்கும் கூடுதலாக பெற்ற அனைத்து நன்கொடைகளையும் அரசியல் கட்சிகள் தெரிவிப்பதை கட்டாயமாக்குதல் ஆகிய தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.