கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்தவர் ரோசி (66). இவருக்கு திருமணம் ஆகவில்லை. உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தார். தனிமையில் வாழ்ந்தவர், முன்பு வீட்டு வேலைகள் செய்து வந்தார். பின்னர் சூழால் ஊராட்சி சார்பில் நடைபெறும் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்குச் சேர்ந்தார். விடுப்பு எடுக்காமல் வேலை செய்து வந்த ரோசியை ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு முறை பாராட்டி கவுரவித்து உள்ளார்.
ரோசி நூறு நாள் வேலைக்குச் செல்லும் இடங்களில் உடன் பணி செய்பவர்கள், “நீ தனியாத்தானே இருக்க, யாருக்காக சம்பாதிக்கிற. நீ இறந்தா உன்னை அடக்கம் செய்யக்கூட யாரும் இல்லியே” என தமாசாக பேசியுள்ளனர். ஆனால் அது ரோசியின் மனதை காயப்படுத்தியதுடன், அவரை சிந்திக்கவும் வைத்தது. தான் இறந்தால் தனது உடலை அடக்கம் செய்ய என்ன செய்யலாம் என யோசித்தார். தனக்கு சொந்தமான ஒன்றரை சென்ட் நிலத்தில், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் வேலை செய்து சம்பாதித்து வைத்திருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தில் தனக்கென்று ஒரு கல்லறையை 2016-ம் ஆண்டு கட்டியிருக்கிறார்.
அந்தக் கல்லறையில் தனக்குப் பிடித்த தனது புகைப்படத்தை கிரானைட் கல்லில் வடிவமைத்து வைத்துள்ளார் ரோசி. ஆங்கிலத்தில் தனது பெயரையும் பொறித்து, தனக்கு பிடித்தமான டிசைனில் கட்டியிருக்கிறார். பின்பக்கத்தில் ஒரு வாசல் போன்று ஏற்படுத்தி வைத்திருந்தார். தான் இறந்தால் ஆந்த வாசல் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் வடிவமைத்தகாக அப்போது கூறியிருந்தார். மேலும், அந்த இடத்தில் எளிதில் எடுக்கும்படி கல்வெட்டு ஒன்றை வைத்து, அதில் மலையாளத்தில் ’ரோசி’ என எழுதப்பட்டு ஆங்கிலத்தில் ’ஓப்பன்’ எனவும் எழுதி, ’இதேபோல் வைக்கவும்’ எனவும் குறிப்பு எழுதி வைத்திருந்தார். அதுமட்டுமல்லாது கல்லறைக்கு பால் காய்ச்சும் நிகழ்ச்சியையும் செய்திருந்தார். கல்லறை அருகிலேயே சிறிய வீட்டையும் கட்டி வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மூதாட்டி ரோசிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே படுத்துள்ளார். அவரை கவனிக்க யாரும் இல்லாததால் தனிமையில் வீட்டிலேயே மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மாலை ரோசியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. ஒரு வாரமாக வீட்டின் வெளியே ரோசி வரவில்லை என்பதால் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என நினைத்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், கொல்லங்கோடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவலர்கள் ரோசியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரோசி இறந்த நிலையில், அவரது உடல் அழுகி காணப்பட்டது. போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர் கட்டி வைத்திருக்கும் கல்லறையில் அப்பகுதி மக்களின் அஞ்சலியுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உயிருடன் இருக்கும்போதே தனக்குத் தானே கல்லறை கட்டிய ரோசியின் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.