சூலூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தரிசு நிலங்களுக்கு பதிலாக விளை நிலங்களை கையகப்படுத்தி, விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தரப்பில் இருந்து வந்துள்ள அறிக்கையில், “சூலூர் விமானநிலையம் பின்புறத்தில் விமானநிலையம் ஓடுதளம் விரிவாக்கம் செய்யவும், ஆயுதக்கிடங்குகள் அமைக்கவும் மத்திய அரசுக்கு நிலம் கையகப்படுத்தி தர 500 ஏக்கருக்கு மேற்பட்ட தரிசு நிலங்களை கையகப்படுத்தாமல் தென்னை, வாழை மற்றும் விவசாயிகள் வீடுகள் அமைந்துள்ள நிலப்பகுதியை குறைந்த விலைக்கு கையகப்படுத்த திட்டமிட்ட திமுக அரசின் செயலால் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விளைநிலங்களுக்கு அருகிலேயே 500க்கும் மேற்பட்ட தரிசு நிலங்கள் வணிகநோக்கத்தோடு வாங்கப்பட்டு, சுற்றுக்கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. பல ரியல் எஸ்டேட் நிறுவனத்தினால் வாங்கப்பட்டு தரிசுநிலங்களாக வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதை கவனத்தில் கொள்ளாத திமுக அரசு திட்டமிட்டே பருவாய் கிராமத்தில் RSP LARR 2013-படி நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் மற்றும் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கும் ஏதுவாக நிலஅளவை மற்றும் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் எண்ணிக்கை ஆகியவை கணக்கெடுப்பு பணிகளை வருவாய்த்துறையினர் துவக்கியுள்ளனர்.
ஏழை விவசாயிகளின் விளைநிலங்களை அபகரிக்க நினைப்பது ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு அரசு துணை போகிறதோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்து, தங்கள் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடுமோ? என்று கவலைப்படுகின்றனர்.
எனவே விமானநிலையத்தின் அடுத்தகட்ட விரிவாக்க பணிக்கு தரிசுநிலங்களை மட்டுமே கையகப்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் மாஃபியாக்களோடு இணைந்துகொண்டு ஏழை விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, மத்திய அரசுக்கு நிலத்தை ஒப்படைத்துவிட்டு ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் வளம்பெற தமிழக முதல்வர் அனுமதிக்கக்கூடாது.
அப்பகுதி விவசாயிகள் நாட்டின் வளர்ச்சிப்பணிக்கு நாங்கள் தடையாக இருக்கமாட்டோம் என்று அறிவித்துவிட்டார்கள். பாஜக விவசாய அணி விவசாயிகளுக்கு துணை நிற்கும். மேற்படி விளை நிலத்தை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு.செந்தில்வேல்,விவசாய அணி மாவட்ட தலைவர் திரு.ரமேஷ்,பருவாய் ஊராட்சி தலைவர் திரு.ரவிச்சந்திரன் உள்ளிட்ட மாநில,மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றார்கள்” என்று பாஜகவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.