உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டாவது திடீர் பயணத்தை கீவ் நகருக்கு மேற்கொண்டுள்ளார்.
உக்ரைன் தலைநகரில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்த போரிஸ் ஜோன்சன், உக்ரைன் துருப்புகளுக்கு அதி நவீன பயிற்சி அளிப்பது தொடர்பில் உறுதி அளித்துள்ளார்.
இரு தலைவர்களும் உறுதி செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 120,000 துருப்புகளுக்கு பிரித்தானியா பயிற்சி அளிக்கும் என்றே தெரிய வந்துள்ளது.
இதனிடையே, சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்த போரிஸ் ஜோன்சன், மீண்டும் உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
டான்காஸ்டரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறித்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக ஊடகங்களை சந்தித்துள்ளதுடன், அப்பாவி மக்கள் மீதான ரஷ்ய துருப்புகளின் அத்துமீறலை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனிடையே, ஜெலென்ஸ்கியை குறிப்பிட்டு பேசிய பிரதமர் ஜோன்சன், நீங்களும் உங்கள் மக்களும் ஏன் விளாடிமிர் புட்டினுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மறுத்து வருகிறீர்கள் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன்.
உங்களின் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் உங்கலுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ஜோன்சன்.
இதே கருத்தையே ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் தமது டெலிகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், பல நாட்களாக நீடிக்கும் இந்த போரில் பிரித்தானியாவின் ஆதரவு உக்ரைனுக்கு உறுதியானது என்பதை நிரூபித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரஷ்ய துருப்புகளின் டாங்கிகளை உக்ரைன் தரப்பு துவம்சம் செய்த காட்சிகளை பிரதமர் ஜோன்சனுக்கு உக்ரைன் தரப்பில் காண்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், உக்ரைன் மக்களுக்கு ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன், இங்கிலாந்து உங்களுடன் உள்ளது, நீங்கள் வெற்றிபெறும் வரை நாங்கள் உங்களுடன் இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.