மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான வன்முறை போராட்டம் பீகார் தொடங்கி உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம் என விரிவடைந்துகொண்டே செல்கிறது. தங்களின் ராணுவ சேவைக் கனவு நிறைவேறாது என்ற காரணத்தால் ராணுவத்துக்குப் பயிற்சி பெற்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இதனால் சாலை மறியல் தொடங்கி ரயில் எரிப்பு வரை அரசின் சொத்துகள் சேதப்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், பீகார் மாநில துணை முதல்வர் ரேணு தேவி-யின் வீடு மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெட்டியா நகரில் உள்ள மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் இல்லமும் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தில், போராட்டக்காரர்கள் பா.ஜ.க எம்.பி-யும் மத்திய அமைச்சருமான சாந்தனு தாக்கூரின் வீட்டை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையால் தடுக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பீகார் துணை முதல்வர் ரேணு தேவி, “பெரிய அளவிலான வன்முறைகள் எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதி. பா.ஜ.க தலைவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை வேறு என்னவென்று சொல்வது? பெட்டியா நகரில் எனது வீடு தாக்கப்பட்டது. ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்தவர்கள் யாரும் காயமடையவில்லை. மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் சகோதரருக்குச் சொந்தமான பெட்ரோல் பம்ப் போராட்டக்காரர்களால் நாசமாக்கப்பட்டுள்ளது.
பெட்டியாவில் உள்ள ஜெய்ஸ்வாலின் வீட்டையும் ஒரு கும்பல் தாக்கியதாகத் தகவல் கிடைத்துள்ளது. நவாடாவில் நடந்த கல் வீச்சு சம்பவத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ அருணா தேவி காயமடைந்தார். அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. மேலும், அங்கு பா.ஜ.க அலுவலகமும் வெறிபிடித்த கும்பலால் எரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடி(யு) கட்சி அக்னிபத் திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறும், புதிய கொள்கையால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு உறுதியளிக்குமாறும் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.