ஓமலூரில் இரிடியம் என்று கூறி பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கூறும்போது, கடந்த 2 மாதங்களாக ஓமலூர் பகுதியில் பண மோசடி, இரிடியம் மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ராஜீ, வில்வேந்திரன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்துள்ளனர். மேலும் 5 பேரில பண மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்று ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அது குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களிடம் யாரேனும் ஏமாந்திருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையில் புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இரிடியம் ரைஸ் புல்லிங், போலி கற்கள், மண்ணுளிப் பாம்பு, பணம் இரட்டிப்பு போன்ற விவகாரங்களில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், கஞ்சா விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய 14 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
சைபர் கிரைம் குற்றம் தொடர்பான புகார்களின் பேரில் இதுவரை ரூ.54 லட்சம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் சிக்கல்கள் உள்ளன. சைபர் கிரைம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளதால் புகார்கள் அதிகரித்துள்ளன. எனினும், இதுபோன்ற மோசடிகளில் சிக்காத அளவிற்கு பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கொடுத்த புகார் தொடர்பாக சட்ட ஆலோசனை கேட்டுள்ளோம். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து, கந்து வட்டி தொடர்பாக புகார்களை 94981009790, 9629390203 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என கேட்டுக் கொண்டார். கந்து வட்டி தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 வழக்குகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்காக, இரண்டு இடங்களில் ஸ்பீடு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட்டு குறுந்தகவல் அனுப்பபடும். இ சலான் முறை அடுத்த சில வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும். சோலார் சக்தியுடன் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 200 சாலை தடுப்பான்கள் சேலம் மாவட்டத்தில் விபத்து நிகழும் இடங்களில் வைக்கப்படும் என்றார். பேட்டியின் போது, டி.எஸ்.பி சங்கீதா, ஓமலூர் காவல் ஆய்வாளர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM