புதுடில்லி :ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை இறுக்கமாக இருந்திருந்தால், பொருளாதாரச் சேதம் மிகப்பெரியதாக இருந்திருக்கும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
அத்துடன், ‘டிஜிட்டல்’ கடன் வழங்கும் சூழலை பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில், வழிகாட்டுமுறைகளை ஏற்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது: தொற்று நோய் காலத்தின் போது, பணவியல் கொள்கை குழு, அந்த சூழ்நிலைக்கு ஏற்ப, பணவீக்கத்தை பொறுத்துக் கொள்ள முடிவு செய்தது. இல்லையெனில், விளைவுகள் பேரழிவை தந்திருக்கும்.பணவியல் கொள்கை இறுக்கமாக இருந்திருந்தால், பொருளாதாரச் சேதம் மிகப்பெரியதாக இருந்திருக்கும். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம்.
ஏஜென்டுகள் நடத்தை
அண்மைக் காலமாக, செயலிகள் வாயிலாக, டிஜிட்டல் முறையில் கடன்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடம், கடனை வசூலிக்கும் ஏஜென்டுகள் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.
இது குறித்து, ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி, அவற்றால் நியாயமற்ற நடைமுறைகள், தரவு தனியுரிமை மீறல், ஆவணப்படுத்தலில் வெளிப்படைத் தன்மையின்மை, உரிம நிபந்தனைகளை மீறுதல் போன்ற பல சிக்கல்களும் ஏற்படுகின்றன.
இப்பிரச்னைகளை தீர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி, விரைவில் டிஜிட்டல் கடன் வழங்குவது சம்பந்தமாக, வழிகாட்டு முறைகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் வாயிலாக, புதுமைகளுக்கான ஆதரவும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்படும்.
சிறப்பு கவனம்
மேலும், கடன் வசூலிக்கும் ஏஜென்டுகள், வாடிக்கையாளர்களை அகாலமான நேரங்களில் அழைத்து, தகாத வார்த்தைகளை உபயோகிப்பதாக புகார்கள் வருகின்றன. இவற்றை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம். உரிய நிறுவனங்கள் மீதும் நடவடிக்கைகள் பாய வழி வகை செய்யப்படும்.
அனைத்து வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வரைமுறைகள் மீறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement