திருவனந்தபுரம்: கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அடிமை வேலைக்காக 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் பலர் ஐஎஸ் தீவிரவாதிகளுக்காக சிரியாவுக்கு கடத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.துபாய், குவைத், பஹ்ரைன் உள்பட வளைகுடா நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து இளம்பெண்கள் வேலைக்கு என்று அழைத்து செல்லப்பட்டு அங்கு அடிமை வேலையிலும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தப்படுவதாக நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. இதில் சிக்கிய ஏராளமான இளம்பெண்கள் மீட்கப்பட்டும் உள்ளனர்.இந்த நிலையில் சமீபத்தில் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வளைகுடா நாடுகளில் உள்ள அரபிகளின் வீடுகளில் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்று கூறி அழைத்து செல்லப்படும் இளம்பெண்கள் அங்கு அடிமை வேலைக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.இதற்கு மறுக்கும் பெண்களை அடித்து கொடுமைப்படுத்தி சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பலிடமிருந்து தப்பி கேரளா வந்த 3 பெண்கள் கூறியதன் மூலம் இந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் ஒரு நிறுவனம் மூலம் இளம்பெண்கள் துபாய், குவைத் உள்பட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரபிகளின் வீட்டில் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்று கூறி இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சம்பளமாக ₹60,000 வழங்கப்படும் என்றும், இலவச விசா, தங்குமிடம் என்று கவர்ச்சிகரமாக இவர்கள் விளம்பரம் செய்திருந்தனர். இதை நம்பி ஏராளமான இளம்பெண்கள் இந்த ஏஜென்சி மூலம் விண்ணப்பித்து துபாய், குவைத் உள்பட நாடுகளுக்கு சென்றனர். ஆனால் அங்கு சென்ற பின்னர் அவர்கள் அரபிகளின் வீடுகளில் அடிமை வேலைக்கு பயன்படுத்தப்பட்டனர். ஒருவேளை உணவு மட்டும் தான் கொடுக்கப்பட்டது. இதற்கு மறுப்பவர்களை அடித்துக் கொடுமைப்படுத்தி சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உல்லாசம் அனுபவிப்பதற்காக கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கேரள மற்றும் மத்திய உளவுத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து குவைத்துக்கு மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் அடிமை வேலைக்காக கடத்தப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம், கண்ணூரை சேர்ந்த கசாலி என்ற மஜீத் மற்றும் அஜு மோன் ஆகியோரின் தலைமையில் தான் இளம்பெண்களை கடத்தும் கும்பல் செயல்பட்டு வருகிறது. குவைத்தில் தலைமறைவாக உள்ள இவர்களை இதுவரை போலீசாரால் நெருங்க முடியவில்லை. இவர்கள் தவிர கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் 2 பேர் குறித்த விவரங்கள் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளன. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, குவைத்திலிருந்து மேலும் 2 இளம்பெண்கள் கேரளாவுக்கு தப்பி வந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்த மத்திய உளவுத்துறை தீர்மானித்துள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.