வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-மேகாலயாவின் சிரபுஞ்சியில் ஒரே நாளில், 97.2 செ.மீ., மழை பொழிந்தது. கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது அதிக மழைப்பொழிவாக இது பதிவாகி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உலகின் அதிக மழைப்பொழிவு உள்ள நகரமான சிரபுஞ்சி உள்ளது. எப்போதும் மழை பொழிந்து வரும் இந்த இடத்தில் இம்மாதம் அதிக மழைப் பொழிவு பதிவானது.
இது குறித்து அசாமின் கவுஹாத்தியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:சிரபுஞ்சியில் ஆண்டு தோறும் 50 முதல் 60 செ.மீ., மழைப் பொழிவு ஒன்று அல்லது இரு முறை நிகழும். 80 செ.மீ.,க்கு அதிகமான மழை வழக்கத்துக்கு மாறானது. இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 80 செ.மீ.,க்கும் அதிகமான மழை பொழிவு ஒனப்து முறை பதிவாகி உள்ளது.
கடந்த 15ம் தேதி, சிரபுஞ்சியின் கிழக்கு காசி மலைப்பகுதியில் 24 மணி நேரத்தில் 81 செ.மீ., மழை பொழிந்தது. மீண்டும் நேற்று முன் தினம் காலை துவங்கிய மழை, நேற்று காலை 8:30 மணி வரை தொடர்ந்தது. இதில், 97.2 செ.மீ., மழை பதிவானது. கடந்த 1995க்கு பிறகான மழைப் பொழிவில் இது அதிகம். கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது அதிக மழைப் பொழிவாக இது பதிவாகி உள்ளது.
ஜூன் மாதம் துவங்கியதில் இருந்து நேற்று வரை, சிரபுஞ்சியில், 408 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement