ஓபிஎஸ் அனுமதியின்றி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்தால் செல்லாது: வைத்திலிங்கம்

சென்னை: “அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் அனுமதியின்றி ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால், அது செல்லாது” என்று அக்கட்சியின் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்தார். அப்போது அவர், இந்த ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை என்ற பிரச்சினை, கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படி ஒரு நல்ல சுமுகமான நிலைக்கு கொண்டுவருவது, கட்சியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எண்ணப்படி வலுப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவது, கட்சியை வலுவாக்குவது, அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

தம்பிதுரை கூறிய கருத்துகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். அந்தக் கருத்துக்களை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதாக தம்பிதுரை கூறியிருக்கிறார்.

23-ம் தேதி பொதுக்குழுவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட்டு அழைப்பு விடுத்துள்ளனர். இதன்பின்னர், இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது பேசிகொண்டிருக்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், பொதுக்குழுக் கூட்டம் நடப்பது குறித்து பதிலளிக்கிறேன்.

பொதுக்குழுவைப் பொறுத்தவரை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டுத்தான் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியும். தானாக எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. ஒருவேளை அப்படி தீர்மானத்தை கொண்டு வந்தாலும் செல்லாது” என்று அவர் தெரிவித்தார்.

சேலத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை, இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, அதிமுகவில் ஒற்றைத் தலைமை இப்போதைக்கு தேவையில்லை என்றும், கட்சியில் இருந்து என்னை யாரும் ஓரம்கட்ட முடியாது என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. | விரிவாக வாசிக்க > அதிமுகவில் என்னை ஓரம்கட்ட முடியாது – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.