வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காபூல்,-‘ஹிஜாப் அணியாத பெண்கள், மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயற்சிக்கின்றனர்’ என எழுதப்பட்ட ‘போஸ்டர்’களை, தலிபான்கள் ஆப்கனில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றினர்.
அடக்குமுறை
கடந்த 1996 – 2001 ஆட்சியின் போது பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது தொடராது என, தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனாலும் அவர்களின் அடக்குமுறைகள் தொடர்ந்தன.
இந்நிலையில், தெற்கு ஆப்கனில் உள்ள காந்தகார் நகர் முழுதும், தலிபான்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், ‘ஹிஜாபை, பெண்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் அணிய வேண்டும். அப்படி அணியாத பெண்கள், மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயல்கின்றனர்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
விளம்பர பலகை
ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், ‘மால்’கள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. ‘குட்டையான, இறுக்கமான, மெல்லிய ஆடைகள் அணிவது தலிபான் கொள்கைகளுக்கு எதிரானது’ என, அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அமைச்சக அதிகாரி அப்துல் ரஹ்மான் தயேபி கூறியதாவது:முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வரும் பெண்களுக்காகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உத்தரவை மதிக்காத பெண்களின் வீட்டில் உள்ள ஆண்கள், அரசு வேலையில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement