அவுரங்கபாத்: மகாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலியில் உள்ள தக்டோடா கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் படான்ஜ் (22). இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது நிலத்தில் சோயா பயிரிட்டுள்ளார். ஆனால், பருவம் தவறி பெய்த மழை மற்றும் வறட்சி காரணமாக சரியான விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால், வருமானமும் கிடைக்கவில்லை. பயிர் காப்பீடு தொகையும் போதுமானதாக இல்லை. இதனால், கைலாஷ் மிகுந்த வேதனை அடைந்தார். வருமானம் கிடைப்பதற்கு என்ன செய்யலாம் என யோசித்த அவர், ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்தார்.ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விட்டால் வருமானம் கிடைக்கும் என்று நம்பியுள்ளார். எனவே கோரிகோனில் உள்ள வங்கியை அவர் அணுகினார். தான் ெஹலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடுவதற்கு ரூ.6.6 கோடி வங்கி கடன் வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார். இது குறித்து கைலாஷ் கூறுகையில்,”வசதியானவர்கள் தான் மிகப்பெரிய கனவுகளை கொண்டு இருக்க வேண்டும் என்று யார் கூறியது? நான் ஹெலிகாப்டர் வாங்குவதற்காக ரூ.6.65 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளேன். மற்ற தொழில்களில் போட்டி இருக்கும். எனவே தான் ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்தேன்,” என்றார்.