தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – ருதுராஜ் களமிறங்கினர்.
ருதுராஜ் 5 ஓட்டங்களில் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 4 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
அவரை தொடர்ந்து இஷான் கிஷன், அணித்தலைவர் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா – தினேஷ் கார்த்திக் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
15 ஓவர்கள் வரை நிதானம் காட்டிய இந்த ஜோடி பின்னர் அதிரடியை துவக்கினர்.
ஹர்திக் பாண்டியா 31 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை சர்வதேச 20 ஓவர் போட்டியில் பதிவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 2 விக்கெட்களையும் யான்சென், மகாராஜ், நோர்ட்ஜெ தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.
அணியின் கேப்டன் பவுமா காயத்தால் (ரிட்டையர்ட் அவுட்) முறையில் வெளியேறினார்.
அதனை தொடர்ந்து டி காக் (ரன் அவுட் )14 ஓட்டங்களிலும், பின்னர் வந்த பிரிட்டோரியஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து வந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரசி வான் டெர் டசன் 20 ஓட்டங்களிலும், ஹென்ரிச் கிளாசென்(8), டேவிட் மில்லர்(9) ஓட்டங்களிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் 87 ஓட்டங்களில் மொத்த விக்கெட்டையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அவேஷ் கான் 4 விக்கெட்டும், சாஹல் 2 விக்கெட்டும், ஹர்சல் படேல், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடரை வெல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் 5வது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.