புதுடெல்லி: இரண்டு இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மிக அதிக அபராதம் விதிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சட்ட அமைச்சகத்துடன் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சில தேர்தல் சீர்த்திருத்தங்களை முன்மொழிந்துள்ளார். அதில் குறிப்பாக, வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளார்.தற்போதைய தேர்தல் சட்டப்படி, மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தல்களில் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார். அவர் 2 தொகுதியிலும் வெல்லும்பட்சத்தில், ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த திருத்தம் கூட 1996 ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான். 1996ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், ஒரு வேட்பாளர் இரண்டு இடங்களுக்கு மேல் போட்டியிட தடை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு முன், ஒரு வேட்பாளர் எவ்வளவு தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது.இதைத் தொடர்ந்து, ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டுமென 2004ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. அவ்வாறு தடை விதிக்காவிட்டாலும், இடைத்தேர்தல் நடத்தும் செலவை சம்மந்தப்பட்ட வேட்பாளரே ஏற்க வேண்டும் எனவும், இதற்காக சட்டப்பேரவை தேர்தல் எனில் ரூ.5 லட்சமும், மக்களவை தேர்தல் எனில் ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்க வேண்டுமென முன்மொழியப்பட்டிருந்தது.இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றபடி, வேட்பாளருக்கு அதிகப்படியான அபராதத்தை விதித்தால் மட்டுமே, ஒருவர் 2 இடங்களில் போட்டியிடுவதை தடுக்க முடியும் எனவும், இடைத்தேர்தல் என்ற பெயரில் தேவையில்லாத செலவினை தவிர்க்க முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.