வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : ‘இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நெருக்கமான உறவு ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன், இந்தியா – ரஷ்யா உறவு வலுப்பெற துவங்கிவிட்டது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுக்காக அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இது, பொருளாதார ரீதியாக ரஷ்யாவை பாதித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய அரசு ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை; அதே நேரம் ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது: இந்தியா – ரஷ்யா இடையிலான உறவு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவு கொள்ளும் எண்ணம் இல்லாத அல்லது அதற்கு தயாராக இல்லாத காலகட்டத்திலேயே இந்தியா – ரஷ்யா உறவு வலுப்பெற துவங்கிவிட்டது.
ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது. பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆட்சி காலத்திலேயே இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவு வலுப்பெற துவங்கிவிட்டது. எது எப்படியிருந்தாலும், இந்தியாவுக்கு எப்போதும் அமெரிக்கா துணை நிற்கும் என்பதை அந்நாட்டுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement