2020-21ம் நிதியாண்டில் பாஜ வருமானம் 79 சதவீதம் சரிவு: நிதி திரட்டுவதில் நம்பர்-1

புதுடெல்லி: பாஜ, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவை தேசிய கட்சிகளாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 8 தேசிய கட்சிகள் கடந்த 2020-21ம் நிதியாண்டில் கட்சி நிதி உட்பட மொத்தம் ₹1.373.783 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) தனது அறிக்கையில் கூறி உள்ளது.தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் சமர்பித்த விவரங்களின் அடிப்படையில், தேசிய கட்சிகளில் பாஜ அதிக வருமானம் ஈட்டி இருப்பதாக ஏடிஆர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பாஜவின் மொத்த வருமானம் ₹752.337 கோடி. இது 8 கட்சிகளின் மொத்த வருமானத்தில் 54.764 சதவீதமாகும். 2வது இடத்தில் காங்கிரஸ் ₹285.765 கோடியுடன் (20.801 சதவீதம்) உள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், பாஜவின் வருமானம் 79 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, 2019-20ம் நிதியாண்டில் பாஜவுக்கு ₹3,623.28 கோடி நிதி கிடைத்துள்ளது. இதே போல, 2019-20ல் ₹682.21 கோடி ஈட்டிய காங்கிரசின் வருமானம் 58.11 சதவீதம் குறைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் வருமானம் முறையே 48.20%, 59.19%, 9.94%, 67.65%, 62.91% குறைந்துள்ளது.பாஜ தனது வருமானத்தில் தேர்தலுக்காக ₹421.014 கோடியும், நிர்வாகச் செலவுகளுக்கு ₹145.688 கோடியும் செலவிட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தலுக்கு ₹91.358 கோடியும், நிர்வாகத்திற்கு ₹88.439 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலுக்கு ₹90.419 கோடியும் பொதுச் செலவுக்கு ₹3.96 கோடியும் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.