சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாதவரத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 12 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். மாதவரம் எம்எல்ஏஎஸ்.சுதர்சனம், ரோட்டரி சங்க ஆளுநர் ஜெ.ஸ்ரீதர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
ரோட்டரி பவுண்டேஷன் சார்பில் டயாலிசிஸ் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரோட்டரி பவுண்டேஷன் இதுவரை 125 டயாலிசிஸ் இயந்திரங்களை திருவொற்றியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. இந்த மையத்தில் 12 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் 22 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது. அந்த நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை விமான நிலையங்களில் சுகாதாரத் துறை குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் கரோனா தொற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் அதிகமாகவுள்ளது. ஆர்டிபிசிஆர் மொத்த பரிசோதனை எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கும் மேல் தொற்று பாதிப்பு இருந்தாலோ, மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கும் மேல் அனுமதி இருந்தாலோ கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அத்தகைய சூழல் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.