தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிகளிற்கு மத்தியில் அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு செல்வதில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிடம் 6000 மெட்ரிக் தொன் எரிபொருளே உள்ளது.
அடுத்த கப்பல் எப்போது வரும் என தெரியாத நிலை காணப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுமக்கள் நாளாந்த பணிகளை செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விடயத்திற்கு தீர்வை காணாவிட்டால் நாடு தானாக முடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
இதேவேளை, 30,000 கல்விசாரா ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு இது ஒரு தீர்வாகும். போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.