புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 12-ம் தேதி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சுவாசப் பாதையில் பூஞ்சைத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதை் தொடர்ந்து மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. இதனால் கடந்த 12-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோனியா காந்தி தற்போது கரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக வரும் 23-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பியது. இப்போது, உடல் நிலை காரணமாக அமலாக்கத்துறையிடம் சோனியா ஆஜராக அவகாசம் கேட்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.