காரைக்காலில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் வாந்தி, பேதி என பலருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். திருநள்ளாறு ரோடு, பெசன்ட் நகர், மாரியம்மன் கோயில் வீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதி, பனங்கரை, தியாகராஜவீதி, கல்லரைநகர் ஒப்பிலாமணியர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பலரும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர்.
இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக படையெடுத்தனர். மருத்துவப்பிரிவில் படுக்கை நிரம்பியதால், எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவிலும் புதிய பிரிவு துவக்கப்பட்டது. அங்கும் நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.
அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவர் டாக்டர். மதன்பாபு, டாக்டர் அருண் தலைமையிலான மருத்துவர் குழு சிகிச்சையளித்தனர்.
வயிற்றுப் போக்கால் அவதிப்பட்ட 90 பேருக்கு அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை தரப்பட்டதாக துணை இயக்குநர் டாக்டர்.சிவராஜகுமார் தெரிவித்தார். இது தவிர திருநள்ளாறு பகுதியில் 40 -க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து முன்கள பணியாளர்கள் மூலம் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக ஊழியர்கள் மருந்து மாத்திரை தந்து வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வரவு படிப்படியாக குறைந்து வருகிறது.
காரைக்கால் நகர் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் குழாய்களையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து, தொற்று ஏற்பட்டதால் பாதிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். நேற்று காரைக்காலில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செல்லுகிற குழாய்களை பரிசோதிக்க பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் ராஜசேகரன் உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை தொழில்நுட்பப் பிரிவினர் அதிகாலையில் இருந்தே மாவட்டம் முழுவதும் ஆய்வில் ஈடுபட்டனர்.
20 – க்கும் மேட்பட்ட இடங்களில் பூமியைத் தோண்டி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காரைக்காலில் தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அனைத்தும் உடனுக்குடன் பொதுப்பணித்துறையின் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு ஆய்வின் முடிவுகள் புதுச்சேரி தலைமை பொறியாளருக்கு அனுப்பப்பட்டன.
பின்னர் குடிநீர் விநியோக குழாய்களில் நெகிழ்வு, அடைப்பு, விரிசல் குறித்த சோதனைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். காரைக்கால் முழுவதும் தொற்று நீக்கும் மென்மையான குளோரின் கலந்த குடிநீரை அதிகாரிகள் முன்னின்று விநியோகித்தனர்.