காரைக்காலில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் அருகே வரிச்சிக்குடி கழுகுமேடு பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அய்யப்பன். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதை கண்காணித்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஐயப்பன் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இரண்டு பேர் வீட்டை கண்காணித்து அப்பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் தரங்கம்பாடி செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மற்றும் அவரது நண்பர் முத்துப்பாண்டி என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.