அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடி பழனிசாமி vs ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதலாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓ.பி.எஸ் மாவட்ட செயளாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்கள் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த 4 நாட்களாக கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தால் மட்டுமே ஒற்றைத் தலைமை பதவியான பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் பேசத் தயார் என்றும் கூறினார்.
அதே நேரத்தில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவருக்கும் இடையே சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க.வில் நீடித்து வரும் ஒற்றை தலைமை சர்ச்சை அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓ.பி.எஸ்-சின் விமர்சனங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்காமல் சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, திருமண விழா ஒன்றில் பங்கேற்றார். பின்னர், இன்று ஆரணியில் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் கலந்து கொண்டார்.
சென்னை திரும்பிய பிறகு, எடப்பாடி பழனிசாமி நாளை தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில், ஓ.பி.எஸ் ஒற்றை தலைமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாகவும், ஜூன் 23 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் இ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு இ.பி.எஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மாவட்ட செயலாளர்களை தங்கள் பக்கம் தக்க வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் முயற்சி செய்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நாளை ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இ.பி.எஸ் நாளை சென்னையில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஒ.பி.எஸ்-சும் தனியாக ஆலோசனை நடத்த முடிவு செய்திருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக தீர்மான குழுவினர் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் செம்மலை, ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், வைகை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் ஓ.பி.எஸ் vs இ.பி.எஸ் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பமான நிலை நிலவுகிறது. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் போட்டி போட்டு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
இந்த நிலையில், இன்று தம்பிதுரை சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஒற்றை தலைமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
ஒற்றை தலைமை விவகாரம் தீராத நிலையில் அதிமுகவில் நடைபெற்று வரும் அடுத்தடுத்த நிகழ்வுகள் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் இன்று 4-வது நாளாக ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். கடந்த 14-ந்தேதி ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததில் இருந்தே ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று ஓ.பி.எஸ். நடத்திய கூட்டத்தில் வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நாளை சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக தனது ஆதரவு மாவட்ட செயலாலர்களை நாளை (ஜூன் 18) சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுகவில் நீடித்து வரும் ஒற்றை தலைமை சர்ச்சை அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“