கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூலிக்கும் ஏஜென்டுகள் கெட்ட வார்த்தையில் திட்டுவது உள்பட அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகள் மோசமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூல் செய்வதற்கு ஏஜென்டுகளை நியமனம் செய்வது கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
ஏஜென்ட்கள்
இந்த ஏஜென்ட்கள் வங்கி அதிகாரிகள் போல் நாகரீகமாக பேசுவதில்லை என்றும் அநாகரிகமாக நடந்து கொள்வதோடு, கடன் வாங்கியவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது போன்ற புகார்கள் வந்துள்ளன. இதன் காரணமாக கடன் வாங்கியவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
எச்சரிக்கை
இந்நிலையில் கடனை வசூலிக்கும் ஏஜெண்டுகள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டுமென ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சக்திகாந்த தாஸ்
Modern BFSI Summit 2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியபோது, ‘கடன் வாங்கியவர்களிடம் நள்ளிரவு நேரத்தில் கடன் வசூல் செய்யும் ஏஜென்டுகள் அழைப்பு விடுத்து வாடிக்கையாளர்களுக்கு டார்ச்சர் செய்து வருவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கெட்ட வார்த்தை
மேலும் கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகள் கடன் வாங்கியவர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது, நேரில் சென்று அநாகரீகமாக நடந்து கொள்வது, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் புகார் அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் புகார்கள் வந்துள்ளன.
கடும் நடவடிக்கை
கடன் வசூல் செய்யும் ஏஜெண்டுகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் கடன் கொடுத்த நிதி நிறுவனத்திற்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வரும்போது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நாங்களே நேரடியாக கடும் நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதே நேரத்தில் ஒழுங்கு படுத்தப்படாத நிறுவனங்கள் மீது புகார் வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நாங்கள் அறிவுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
தற்கொலை
சமீப காலமாக கடன் வாங்கியவர்கள் வங்கி ஏஜண்ட்களின் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்த கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்படி நடவடிக்கை
கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூல் செய்ய சட்டப்படியான நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்றும், சட்டத்தை மீறி கந்து வட்டி வசூல் செய்பவர்கள் போல் அநாகரிகமாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
RBI Governor warns to loan recovery agents to use harsh words
RBI Governor warns to loan recovery agents to use harsh words | கடன் வாங்கியவர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதா?