புதுச்சேரி: மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 15ம் தேதி வரை 77 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர். இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆக குறைந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம், 1,809 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், புதுச்சேரியில் 23 பேர், காரைக்காலில் 6, ஏனாம், மாகி பிராந்தியங்களில் தலா ஒருவர் என, மொத்தம் 31 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மாநிலத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரியில் 69 பேர், காரைக்காலில் 16, ஏனாமில் 5, மாகியில் 9 என மொத்தம் 99 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர்.
புதுச்சேரியில் இதுவரை 1,27,589 பேர், காரைக்காலில் 23,087, ஏனாமில் 8,571, மாகியில் 6,776 பேர் என மொத்தம் 1,66,023 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 1,63,961 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் கடந்த 15ம் தேதி 1.05 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று பரவல் ஒரே நாளில் 1.71 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் 1,015 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன் மூலம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 9,69,731 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.