மேட்டூர் அணை, கல்லணையில் காவிரி மேலாண்மை ஆணையக் குழுவினர் ஆய்வு….

திருச்சி: தமிழ்நாடு, கர்நாடகம் இடையே மேகதாது அணை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையிலான ஆணையக் குழுவினர் மேட்டூர் அணை மற்றும் கல்லணை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.  இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர்கள் தெரிவித்து உள்ளார். இதற்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அணையின் நீர் அளவீட்டு மானி, வலது கரை, சுரங்கம், நில அதிர்வு கருவி, அணை மதகுகள் உள்ளிட்டப் பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர், மேட்டூர் அணை நீர் வளத்துறை அலுவலகத்தில் உள்ள வெள்ள நீர் கட்டுப்பாட்டு அறையில் ஆலோசனை நடத்தினர்.

ஒகேனக்கல் பகுதி பிலிகுண்டுலுவிலும், மேட்டூர் அணையிலும் ஆய்வு மேற்கொண்டவர், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக் கால்வாய் ஆற்றின் தலைப்பு பகுதிக்கு சென்றுஆய்வு செய்தனர்., திருச்சி வழியாக வந்து கல்லணையிலும் ஆய்வு செய்தனர்.  கல்லணையில் உள்ள ஆய்வு மாளிகை யில் தமிழக நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையறிந்த விவசாயிகள், அங்கு திரண்டனர். காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கர்நாடக அரசுக்குஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைக்க வலியுறுத்தி கல்லணையில் ஆய்வுக்கு வந்த ஆணையக் குழுவுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பின்னர் அவர்கள் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரை சந்தித்து மனு அளித்தனர். தமிழகத்தில் காவிரியை நம்பி 20 லட்சம் ஏக்கரில் பாசனம் செய்தோம். போதிய நீர் இல்லாத காரணத்தால் தற்போது பாசன பரப்பு12 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் ஒட்டுமொத்த விவசாயமும் கேள்விக்குறியாகும் என அவர்கள் கூறினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், வரும் 23-ம் தேதி ஆணையத்தின் கூட்டம் நடைபெறும்போது, மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்கப்படும் என்றவர், காவிரி மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பாகும். எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, நீர் பங்கீடை செயல்படுத்துவதுதான் எங்கள் பணி என்றார்.

காவிரி விவகாரம் இன்னொரு திமிர்த்தனம்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.