இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்சா நோய் வேகமாக பரவி வருவதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
14 பேர் மரணம்
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது வரையான காலம் வரை இன்புளுவன்சா நோய் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் 11 நோயாளர்களும், மே மாதத்தில் 6 நோயாளர்களும், ஜுன் மாதத்தில் 103 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இந்த நோய் தாக்கத்தினால் அதிகளவில் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, 75 பெண்களும், 33 ஆண்களும், 12 சிறார்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இன்புளுவன்சா நோய் தொற்றினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 11 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவதாக அவர் கூறுகின்றார்.
அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் நபர்
இது இன்புளுவன்சா ஏ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் வைரஸ் தொற்று தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
இந்த நோய் தாக்கத்திற்கு அதிகளவில் வயோதிபர்கள் மற்றும் கர்ப்பணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். காய்ச்சல், இருமல், தடிமல் போன்ற நோய் அறிகுறிகள் இந்த வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.