கல்யாண மஸ்து எனப்படும் இலவச திருமண திட்டத்திற்கு 1-ம்தேதி முதல் பதிவு செய்யலாம்; திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு

திருமலை: திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழை-எளியோருக்கு இலவசமாக திருமணம் செய்யும் கல்யாண மஸ்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இருந்தபோதே தொடங்கப்பட்ட இந்த திட்டம், அவர் இறந்தபின் கைவிடப்பட்டது. முதல்வராக ஜெகன்மோகன் பதவியேற்ற நிலையில் தனது தந்தை ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்ட இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அறங்காவலர் குழுவும் கல்யாண மஸ்து திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்தனர். அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள 26 மாவட்ட மையங்களில் ஆகஸ்ட் 7-ம் தேதி கல்யாண மஸ்து திட்டத்தின் மூலம் திருமணம் நடத்த முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜூலை 1-ம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரில் பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்யாணமஸ்து முகூர்த்த பத்திரிக்கை பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் ஊர்வலமாக ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதுதொடர்பாக செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது: ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 8.07 மணி முதல் 8.17 மணி வரை சுபமுகூர்த்தம் என பண்டிதர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக அந்தந்த மாவட்ட மையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தம்பதிகளுக்கு திருமண ஆடைகள், தாலி, மெட்டி வழங்கப்பட்டு திருமண போஜனம் வழங்கப்படும். ஏழைகள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது அவர்களுக்கு பெரும் நிதிச்சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த கல்யாண மஸ்து திட்டத்தில் திருமணங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஆந்திராவிலும் பின்னர் பிற மாநிலங்களிலும் கல்யாண மஸ்து திட்டம் தொடங்கப்படும். எனவே ஏழுமலையான் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்ய ஆந்திர மக்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.