ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் அதிரடி| Dinamalar

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பா.ஜ., கேட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.,வின் இந்த திடீர் முயற்சிக்கு முக்கிய காரணம் ஓட்டுக் கணக்கு தான். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத ஒருவரை வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., மேலிடம் வியூகம் வகுத்து வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ., நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த, சமீபத்தில் எதிர்க்கட்சிகள் புதுடில்லியில் கூடி ஆலோசனை நடத்தின.

ஆச்சரியம்

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள மம்தா பானர்ஜி, சரத் பவார், அகிலேஷ் யாதவ் என, பல தலைவர்களை அழைத்து, பா.ஜ., ஆதரவு கேட்டுள்ளது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என அவர்களிடம் ஆலோசனையும் கேட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. எதிர்க்கட்சிகளும் ஏற்கும் வேட்பாளரை நிறுத்துவதற்கு பா.ஜ., முயற்சிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்துல் கலாமைத் தவிர இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அனைவரும், ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

தற்போதைய நிலையில், தான் நிறுத்தும் வேட்பாளர் வெற்றிக்கு, மேலும், 13 ஆயிரம் ஓட்டு மதிப்புகள், அதாவது, 1.2 சதவீத ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு தேவைப்படுகின்றன.கடந்த, 2017ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 5.27 லட்சம் ஓட்டு மதிப்பு இருந்தது. இதைத் தவிர, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின், 1.33 லட்சம் ஓட்டுகளும் பா.ஜ., நிறுத்திய ராம்நாத் கோவிந்துக்கு கிடைத்தன.

போட்டி

ஆனால், சமீப காலத்தில் தே.ஜ., கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறியுள்ளன. தற்போது, இந்தக் கூட்டணியில், 20 கட்சிகள் மட்டுமே உள்ளன. இதில் முக்கிய கட்சியான அ.தி.மு.க.,வுக்கு, ஐந்து எம்.பி.,க்கள், 66 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., இடையே சில விஷயங்களில் மோதல் உள்ளது. மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சி யார் என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி உள்ளது. இதனால், அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் தங்களுக்கு முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகம் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

தே.ஜ., கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கிய பெரிய கட்சி, ஐக்கிய ஜனதா தளம். பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான இந்தக் கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு உள்ளது. கடந்த, 2012ல், தே.ஜ., கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம், அப்போது மத்தியில் ஆண்ட காங்., நிறுத்திய பிரனாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தது. கடந்த, 2017ல், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., நிறுத்திய ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்தது.


அதிருப்தி
அதுபோல, தற்போது நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக நிதிஷ் குமார் கட்சி ஓட்டளித்தால் என்ன செய்வது என்ற கவலை பா.ஜ.,வுக்கு உள்ளது.ஜனாதிபதி தேர்தல் என்பது ரகசியமான ஓட்டெடுப்பு முறையாக இருக்கும். இதுவும் பா.ஜ., தலைமைக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் பதவி கிடைக்காதவர்கள் அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக திரும்பினால் என்ன செய்வது என்ற கேள்வியும் பா.ஜ., தலைமைக்கு உள்ளது.

பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் போன்றவை கடந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு கைகொடுத்தன.தற்போது இந்தக் கட்சிகள் ஆளும் ஒடிசா, தெலுங்கானா, ஆந்திராவில் கட்சியை வளர்ப்பதில், பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. அதனால், இந்தக் கட்சிகளின் ஓட்டு சிந்தாமல் சிதறாமல் கிடைக்குமா என்ற கேள்வியும் பா.ஜ., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சில கட்சிகள் பங்கேற்கவில்லை.

latest tamil news

கூட்டத்தில் பங்கேற்றாலும், அதிருப்தியில் சில தலைவர்கள் உள்ளனர். இது பா.ஜ.,வுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.காரணம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால், பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரின் தோல்வி நிச்சயம். இது போன்ற காரணங்களால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும், ஆதரவையும் பா.ஜ., கேட்டுள்ளது. அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஜனாதிபதி தேர்தலுக்கும் புதிய வியூகத்தை வகுத்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத ஒருவரை வேட்பாளராக அறிவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


– நமது சிறப்பு நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.