புதுடெல்லி: கச்சா எண்ணெயை தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் தள்ளுபடி விலையில் நிலக்கரியை வாங்கி இந்தியா குவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் போரால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யா தனது வர்த்தகத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கி திருப்பி உள்ளது. நீண்ட காலமாக ரஷ்யாவுடன் நட்பு பாராட்டும் இந்தியாவும் இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. முன்னதாக, உக்ரைன் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்த விஷயத்தில் இந்தியா எந்த விதிமுறையை மீறவில்லை என அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அதே சமயம், ஒரே நேரத்தில் அதிகப்படியான வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்தியாவிடம் வலியுறுத்தியது.இந்நிலையில், கச்சா எண்ணெயை தொடர்ந்து தற்போது ரஷ்யாவிடமிருந்து அதிகப்படியான நிலக்கரியையும் இந்தியா இறக்குமதி செய்வதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மே 27ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரையிலான கடந்த 20 நாளில் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் நிலக்கரி கொள்முதல் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பல வருடங்களில் இதுபோல் எப்போதும் நடந்ததில்லை என கூறப்படுகிறது. துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ரஷ்ய நிறுவனங்கள் மூலமாக இந்தியா நிலக்கரியை வாங்கி வருகிறது. சரக்கு போக்குவரத்து செலவு அதிகமிருந்தாலும், இந்தியாவுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விலையில் நிலக்கரியை ரஷ்ய நிறுவனங்கள் விற்கின்றன. இதற்கான பணத்தை ரூபாயாவும், ஐக்கிய அரபு எமிரேட்சின் திர்ஹாம் கரன்சியாகவும் ரஷ்ய நிறுவனங்கள் பெற்றுக் கொள்வதாக ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி நிலக்கரி மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களின் கொள்முதல், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 20 நாட்களில் ஆறு மடங்கு உயர்ந்து, சுமார் ரூ.2,500 கோடி வர்த்தகம் நடந்துள்ளது. இதே போல், கடந்த 20 நாட்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தின் மதிப்பு 31 மடங்கு அதிகரித்து, ரூ.16,500 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு மாதத்திலும் இந்தியாவின் கொள்முதல் இதே வேகத்தில் தொடர வாய்ப்புள்ளதாக ராய்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.* கடந்த 3 வாரங்களில் ஒருநாளைக்கு சராசரியாக ரூ.120 கோடிக்கு ரஷ்ய நிலக்கரியை இந்தியா வாங்கி உள்ளது. இது உக்ரைன் போருக்குப் பிறகு, மூன்று மாதங்களில் வாங்கிய நிலக்கரி கொள்முதலை விட 2 மடங்கு அதிகமாகும். * கடந்த 20 நாளில் ஒருநாளுக்கு சராசரியாக ரூ.800 கோடிக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. * சமீபத்தில் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டதால், மின்பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், தற்போது ரஷ்ய நிலக்கரி தேவையை ஈடுகட்ட கைகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.