டாக்கா-‘எங்கள் நாட்டில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட பாலம், சீனாவின் சாலை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவில்லை; அதன் நிதி உதவியும் பெறப்படவில்லை’ என, நம் அண்டை நாடான வங்கதேசம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் அந்த நாட்டின் தென் மேற்கே உள்ள, 19 மாவட்டங்களை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் வரும், 25ல் திறந்து வைக்கப்பட உள்ளது.இதற்கிடையே, பல நாடுகளை இணைக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. சீனா சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, வங்கதேசத்தின் பத்மா பாலம் கட்டப்பட்டுஉள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதைத் தவிர, சீனா, வங்கதேச ஒத்துழைப்பில் இந்தப் பாலம் கட்டப்பட்டது தொடர்பாக விளக்கும் நிகழ்ச்சிக்கு, டாக்காவில் உள்ள சீன துாதரகம் வரும், 22ல் ஏற்பாடு செய்திருந்தது.இது குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:பத்மா பாலம், வங்கதேச மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் தென்மேற்கு மாவட்டங்கள், நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படுகின்றது.இந்த பிரமாண்ட பாலம் முழுக்க முழுக்க வங்கதேச அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் சாலை திட்டத்தின் கீழ் இது அமைக்கப்படவில்லை. சீனாவின் நிதியுதவியும் பெறப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement