சென்னை: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸார் போராட்டம் நடத்துகின்றனர்.
ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்ததற்கே போராட்டம் நடத்தும் காங்கிரஸார், கேரளாவில் தங்கக் கடத்தல் தொடர்பான விசாரணை முடிவடையும் முன்னரே பினராயி விஜயன் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்துவது, காங்கிரஸின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: இதில் இரட்டை நிலைப்பாடு இல்லை.ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதற்கு பினராயி விஜயனின் பதில் என்ன என்று கேட்டுத்தான், கேரளாவில் காங்கிரஸார் போராட்டம் நடத்துகின்றனர். மேலும், இதில் காங்கிரஸ் தேசிய தலைமையின் தலையீடு இல்லை. மாநிலப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
அதேபோல, நேஷனல் ஹெரால்டு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் கூறுகிறோம்.
இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் இல்லை. எந்த விதிமீறலும் கிடையாது. பணப் பரிமாற்றமே இல்லாத வழக்கை அமலாக்கத் துறை விசாரிப்பது ஏன்? இந்த விவகாரத்தில் பாஜக உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கே.பாலகிருஷ்ணன் கருத்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘சோனியா, ராகுல் காந்தி மீதான விசாரணை பழிவாங்கும் நடவடிக்கை. குடியரசுத்தலைவர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் தலைவர்கள் மீது மத்திய அரசு அபாண்டமான பழி சுமத்தியுள்ளது. அதை காங்கிரஸும், நாங்களும் எதிர்க்கிறோம்.
ஆனால், அதே காங்கிரஸ், கேரளாவில் பாஜகவுக்கு துணைப் போகிறது. தங்கக் கடத்தலில் பினராயி விஜயனின்நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இது. பாஜக அனைத்து மாநிலங்களிலும் இதேபோலத்தான் செயல்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் பினராயிவிஜயன் மீதான குற்றச்சாட்டு. ஆனாலும், காங்கிரஸார், பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகின்றனர்.
கேரளாவில் விசாரணை நடத்த வேண்டும் என்றால், டெல்லியில் மட்டும் விசாரணை நடத்தக் கூடாது என்று காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன்’’ என்றார்.