வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோர்டனே : பின்லாந்து சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்றார்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 24. டோக்கியோ போட்டியில் அசத்திய இவர், சுதந்திரத்துக்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஒலிம்பிக் போட்டி முடிந்து 10 மாதத்துக்குப் பின் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த ‘பாவோ நுார்மி கேம்ஸ்’ போட்டியில் 89.30 மீ., துாரம் எறிந்து, வெள்ளி வென்றார். நேற்று பின்லாந்தில் நடந்த மற்றொரு போட்டியில் களமிறங்கினார் நீரஜ் சோப்ரா. மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்தது. முதல் வாய்ப்பில் 86.69 மீ., துாரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் ‘பவுல்’ செய்தார். மூன்றாவது வாய்ப்பில் தடுமாறி விழுந்த இவர், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். கடைசி 3 வாய்ப்புகளில் ஈட்டி எறியவில்லை.
இருப்பினும் முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 2012 ஒலிம்பிக் சாம்பியன், டிரினிடாட்டின் கெஸ்ஹார்ன் (86.64 மீ.,) வெள்ளி வென்றார். உலக சாம்பியன், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்சிற்கு (84.75 மீ.,) வெண்கலம் கிடைத்தது.
Advertisement