பெங்களூரு: டெல்லி சென்றுள்ள கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், கடந்த வியாழக்கிழமை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார். அப்போது, மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, தமிழக அரசின் வழக்கை சந்திப்பது தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மேகேதாட்டு திட்டம், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறும்போது, “மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்றுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அதுகுறித்து விவாதித்து, ஆணையத்தின் ஒப்புதலைப் பெற முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்தேன்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதேசமயம், மத்திய அரசின் உதவியுடன் இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்றவும் முயற்சித்து வருகிறோம்” என்றார்.