தானே: நடிகை கேதகி சித்தாலே கைது செய்யப்பட்ட நிலையில், போலீசுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், கவிதை வடிவிலான சர்ச்சைக்கரிய ஒரு பதிவை மராத்தி நடிகை கேதகி சித்தாலே (29) தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இவை என்சிபி தலைவர் சரத் பவாரை குறிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேதகி சித்தாலேவை தானே போலீசார் கைது செய்தனர். தற்போது இவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா, மகாராஷ்டிரா காவல் துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘வேறொருவரால் எழுதப்பட்ட கவிதையை தான் சமூகவலைதளத்தில் பகிர்ந்ததாக கேதகி சித்தாலே கூறியுள்ளார். இந்த விஷயத்தில் கேதகி சித்தாலே மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது அவதூறு வழக்கு பயன்படுத்தியது ஏன்? இந்த விவகாரத்தில் புகார் அளித்தவர் யார்? சட்ட நடைமுறைகளை ஏன் சரியாக பின்பற்றவில்லை?உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லாத வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதனை ஏன் காவல்துறை செய்யவில்லை. கேதகி சித்தாலேவை தாக்கிய தேசியவாத காங்கிரஸ் பெண் தலைவர்களுக்கு எதிராக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஐடி சட்டத்தின் 66ஏ பிரிவு ஏன் பயன்படுத்தப்பட்டது? பூர்வாங்க விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பே அவரை ஏன் கைது செய்தீர்கள்? இந்த வழக்கில் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை. காவல்துறை அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் செயல்படக்கூடாது; ஒவ்வொரு விஷயத்திலும் பாரபட்சமின்றிய முறையில் செயல்பட வேண்டும். கேதகி சித்தாலே தொடர்பான வழக்குகளின் விபரங்களையும், அதன் நிலை அறிக்கையையும் அடுத்த 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.