சாத்தியமான மூன்றாம் உலகப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராகுமாறு ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் பிரித்தானிய முதன்மை தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் கொலைவெறித் தாக்குதல் உலகளாவிய பாதுகாப்பின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாக பிரித்தானியாவின் புதிய இராணுவத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, போரில் ரஷ்யாவை வெல்லக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகவும் அவர் சபதம் செய்துள்ளார்.
மேலும், துணிச்சல் மிகுந்த பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பாவில் மீண்டும் போரிட தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
சேவையில் உள்ள அனைத்து பிரித்தானிய வீரர்களுக்கும் அளித்துள்ள செய்தியில், பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய சர்வாதிகாரி உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து உலகம் மாறிவிட்டது என தளபதி சாண்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய இராணுவ தளபதியாக கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுள்ள ஜெனரல் சாண்டர்ஸ், பணியின் நான்காவது நாள் மொத்த இராணுவத்தினருக்கு பொதுவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நமது நட்பு நாடுகளுடன் இணைந்து போரிட்டு ரஷ்யாவை போரில் தோற்கடிக்கும் திறன் கொண்ட ராணுவத்தை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் வீரர்களின் எண்ணிக்கையை 73,000 என குறைத்த பின்னர், 300 ஆண்டுகளில் மிகச்சிறிய இராணுவத்தை வழிநடத்தும் தளபதியாக மாறியுள்ளார் ஜெனரல் சாண்டர்ஸ்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை குறிப்பிட்டு பேசியுள்ள அவர், நிலத்தில் போரிடவும் வெற்றி பெறவும் தயாராக இருப்பதன் மூலம் பிரித்தானியாவை பாதுகாக்க முடியும் என்றார்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் பிரித்தானிய இராணுவத்தை வழிநடத்திய 56 வயதான ஜெனரல் சாண்டர்ஸ், இராணுவத்தை நவீனமயமாக்கும் திட்டங்களை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார்.