பெங்களூருவில் இன்று பைனல்: கோப்பை வெல்லுமா இந்தியா| Dinamalar

பெங்களூரு: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் ஐந்தாவது ‘டி-20’ போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா வென்று கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. அடுத்த இரு போட்டியில் எழுச்சி பெற்ற இந்தியா, 47, 82 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்த, தொடர் 2-2 என சமனில் உள்ளது.

இன்று ஐந்தாவது, கடைசி போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் வென்று ரிஷாப் பன்ட் தலைமையிலான இளம் இந்திய அணி கோப்பை வெல்ல திட்டமிட்டுள்ளது. இதற்கு கைகொடுக்கும் வகையில் இஷான் கிஷான் (191 ரன்) மீண்டும் ரன் வேகம் காட்டலாம். ருதுராஜ் (23, 1, 57, 5) சீரற்ற பேட்டிங் சிக்கல் தருகிறது.

மீள்வாரா ஸ்ரேயாஸ்


‘மிடில் ஆர்டரில்’ ஸ்ரேயாஸ் (36, 40, 14, 4) மீண்டு வர வேண்டும். ரிஷாப் பன்ட்டும் (29, 5, 6, 17) பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றுகிறார். இருப்பினும் ரோகித், கோஹ்லி, பும்ரா என ‘சீனியர்கள்’ இல்லாத நிலையில் இன்று வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றி சிறந்த கேப்டனாக எழுச்சி பெற முயற்சிக்கலாம்.

‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா (117) பேட்டிங் ஆறுதலாக உள்ளது. பின் வரிசையில் வரும் தினேஷ் கார்த்திக் (92), ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறார். மீண்டும் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்வார் என நம்பலாம்.

அவேஷ் எழுச்சி


பந்துவீச்சில் ‘சீனியர்’ புவனேஷ்வர் (6 விக்.,), ஜூனியர் ஹர்ஷல் படேல் (7) ஜோடி நம்பிக்கை தருகின்றன. முதல் மூன்று போட்டியில் ஏமாற்றிய அவேஷ் கான், நான்காவது போட்டியில் 4 விக்கெட் சாய்த்து எழுச்சி பெற்றார். சுழலில் சகால் (6 விக்.,) ஜாலம் காட்ட, அக்சர் படேல் (3) கைகொடுக்கிறார்.

பவுலிங் மாற்றம்


முதல் இரு போட்டியில் பேட்டிங்கில் மிரட்டியது தென் ஆப்ரிக்கா. திடீரென என்ன ஆனது எனத் தெரியவில்லை. தொடர்ந்து சொதப்புகின்றனர். கிளாசன் (118 ரன்), வான்டெர் துசென் (97), ‘சீனியர்’ மில்லர் (96), காயத்தால் அவதிப்படும் கேப்டன் பவுமா (53), ‘ஆல் ரவுண்டர்’ பிரிட்டோரியஸ் (53), குயின்டன் டி காக் மறுபடியும் மிரட்ட முயற்சிக்கலாம்.

பந்து வீச்சில் ரபாடாவுக்குப் (2 விக்.,) பதில் வந்த லுங்கிடி (2) சிறப்பான துவக்கம் தருகிறார். ஜான்சென் (1) அதிக ரன்களை தருகிறார். ‘ஆல் ரவுண்டர்’ பிரிட்டோரியஸ் 5 விக்கெட் சாய்த்துள்ளது பலம். சுழற்பந்து வீச்சாளர்கள் கேஷவ் மஹராஜ் மட்டும் அதிகபட்சம் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 1 விக்கெட் மட்டும் சாய்த்த ஷம்சி இன்று மாற்றப்படலாம்.

மைதான ராசி


பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இந்திய அணி 5 போட்டிகளில் பங்கேற்றது. இதில் 2ல் மட்டும் வென்றது. 3ல் தோற்றது.
* கடந்த 2019ல் இங்கு நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 9 விக்கெட்டில் தோற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.