உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் 216 ஏக்கர் பரப்பில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. 21 ஏக்கரில் கரும்பு ஆராய்ச்சி பிரிவும், 25 ஏக்கரில் கரும்பாலையும், எரிசாராய ஆலையும் இங்கு இயங்கி வருகிறது. 93 நிரந்தர பணியாளர்கள் உட்பட சுமார் 350 பேர் பணியாற்றி வருகின்றனர்.
பொது விநியோக திட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்து தனது பங்களிப்பை செய்து வருகிறது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இது கடந்த 1960-ம் ஆண்டு அன்றைய முதல்வர் காமராஜரால் ஏற்படுத்தப்பட்ட தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகும்.
இங்கு, கோவை மாவட்டம் சூலூர், சுல்தான் பேட்டை, திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், திண்டுக்கல் மாவட்டம் பழநி, வேடசந்தூர், நெய்காரப்பட்டி, தொட்டம்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளையும் கரும்பு, விவசாயிகளிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சர்க்கரை உற்பத்தி நடைபெறும். உற்பத்தியாகும் சர்க்கரை அரசின் பொது விநியோக திட்டத்துக்காக விநியோகிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் ஆலையில் பதிவு செய்த 1,210 விவசாயிகள் மூலம் 3,000 ஏக்கர் பரப்பிலான 1,08,000 டன் கரும்பு அரவை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
62 ஆண்டுகள் பழமையான இந்த ஆலையின் புனரமைப்புக்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் ஆலை நிர்வாகம் கடன் சுமையாலும், நிதி இழப்பினாலும் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியத்துவம் தரும் முதல்வர்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் சி.பால் பிரின்சிலி ராஜ்குமார் ‘இந்து தமிழ் திசை’ – செய்தியாளரிடம் கூறியதாவது: தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு அரவைக்கான கொள்ளளவு 850 டன் ஆக இருந்தது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 1,250 டன் ஆக அதிகரித்து உள்ளது. 62 ஆண்டுகளாக இயங்கி வரும் பழைய இயந்திரங்கள், கரும்பு சாறு கொண்டு செல்லப்படும் குழாய், எரியூட்டப்படும் இடங்களில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக பிழிதிறன் குறைந்துள்ளது. எனினும் சர்க்கரை கட்டுமானத்தின் அளவு 9.70 சதவீதமாகவும், சராசரியாக 8.45 சதவீதமாகவும் உள்ளது.
அரசு வழி வகை கடன் ரூ.58 கோடி திருப்பி செலுத்தப்படாமல் உள்ளது. பழுதான இயந்திரங்களால் ஆலைக்கு தொடர்ச்சியாக ரூ.157 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆலை புனரமைப்பு, எரிசாராய ஆலை புனரமைப்பு பணிகளுக்காக ரூ.60 கோடி நிதி தேவைப்படுகிறது. முதல்வரின் முன்னோடி துறைகள் 100 என்ற பட்டியலில் 5-வது இடத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருப்பதன் மூலம் இத்துறைக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதை உணர முடிகிறது.
தனியார் கரும்பு மற்றும் எரிசாராய ஆலைகள் நிறுவியுள்ள நவீன இயந்திரங்களுக்கு இணையான கருவிகளை பொருத்தினால் அமராவதி ஆலையும் லாபம் ஈட்டும் நிலை ஏற்படும். அண்மையில் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.