பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளது. இதனால் சாப்பிடும்போது பிடிக்கவில்லையென்று பூண்டை தூக்கியெறியாமல் சாப்பிட வேண்டும். இங்கு சுவையான பூண்டு சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
வர மிளகாய் – 2,
பூண்டு பல் – 20,
சின்ன வெங்காயம் – 10,
புளி – சிறு நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு,
கடுகு – கால் ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, வரமிளகாய் சேர்த்து (காம்பு நீக்காமல்) லேசாக வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் பூண்டு பற்களை சேர்த்து லேசாக வதக்கவும். பூண்டு நன்கு வதங்கியதும், அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அதனுடன் ஊறவைத்த புளி சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் ஆற விடவும்.
இதை அப்படியே மிக்சியில் சேர்த்து, அதனுடன் ஏற்கெனவே வதக்கிய வரமிளகாய் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து, அதில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்து வரவும், அதனுடன் ஏற்கெனவே அரைத்து வைத்த சட்னி சேர்த்து லேசாக வதக்கவும். சட்னி கெட்டியாக வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள்.
அவ்வளவு தான்.. சுவையான பூண்டு சட்னி சில நிமிடங்களில் தயார். இட்லி, தோசை, சப்பாத்திக்கு இது பர்ஃபெக்ட் சைட் டிஷாக இருக்கும்..
இன்னைக்கு பூண்டு சட்னி செய்து உங்க வீட்டுல எல்லாரையும் அசத்துங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“