எந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்
ராணா – சாய்பல்லவி நடிப்பில் உருவான ‘விராத பர்வம்’ படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக சாய் பல்லவி கொடுத்த பேட்டி ஒன்றில் ‘காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப்படுத்தியிருப்பார்கள், அது வன்முறை என்றால், சமீபத்தில் பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறுகிறார்கள் அதுவும் தவறுதான். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம்’ என்றும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சாய் பல்லவிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் பகிரப்பட்டது. மத வேறுபாட்டை தூண்டும் வகையில் பேசியதாக சில அமைப்புக்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்ததுடன், வழக்கும் தொடர்ந்தனர். இதனையடுத்து சாய் பல்லவி மீது எஃப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த போட்டியில் தான் பேசியது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி. அந்த வீடியோவில் ‘இது போல் ஒரு வீடியோ வெளியிடுவது இது தான் முதல் முறை. இதற்கு முன் எனது கருத்துக்களை பகிர மட்டுமே வீடியோ பதிவிட்டுள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு வீடியோ வெளியிடுகிறேன். சில நாட்களுக்கு முன் நான் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இதற்காக எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி. என்னை பொருத்த வரை மனிதர்கள் அனைவருமே ஒன்று தான். அதைத் தான் நான் எனது பேட்டியில் சொன்னேன். ஒரு மருத்துவ பட்டதாரியாக, எந்த உயிரையும் இனம், மதம், ஜாதி, கலாச்சாரம், மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது.
எல்லோரின் உயிரும், உணர்வும் ஒன்று தான். நான் பயின்ற 14 வருட பள்ளி வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் இந்தியர்கள் அனைவரும் சமம். அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என உறுதிமொழி எடுத்து அதுவே மனதில் பதிந்து விட்டது. சமீபத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் டைரக்டரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் நான் இதையே தான் கூறினேன்.
எந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என்றார். நாங்கள் எப்போதும் நடுநிலையாகவே இருந்திருக்கிறோம். நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள். சிலர் எனது முழு பேட்டியை கேட்காமல் ஒரு சிறு பகுதியை பார்த்துவிட்டு பதிவிட்டு உள்ளனர். நான் சொன்னதின் உண்மை தன்மையை அவர்கள் ஆராயவில்லை.
நான் என்ன தவறு செய்தேன் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தனிமையாக உணர்ந்தேன். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.’ என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.