ஹைதராபாத்: அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செகந்திராபாத்தில் ரயிலை எரித்த சம்பவத்தில், தென் மத்திய ரயில்வே துறைக்கு ரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வட்டார மேலாளர் குப்தா நேற்று தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றும், மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்டு, ரயிலை எரிக்க செகந்திராபாத் வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
செகந்திராபாத் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது போலீஸார் 52 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியான சுப்பாராவ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளது. இவர் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கம்பம் பகுதியில் ராணுவ அகாடமி நடத்திவருகிறார். இவரின் அழைப்பின் பேரில் சுமார் 10 ராணுவ அகாடமியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரயில்கள் மூலம் செகந்திராபாத் வந்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் ஒருவரான வாரங்கலை சேர்ந்த ராகேஷ் என்பவர் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இதனிடையே, செகந்திராபாத் ரயில் எரிப்பு சம்பவம் குறித்து தென் மத்திய ரயில்வே துறையின் வட்டார மேலாளர் குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆர்ப்பாட்டக்காரர்களால் தென் மத்திய ரயில்வே துறைக்குரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில்கள் ரத்து ஆனதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இன்னமும் கணக்கிடப்படவில்லை. செகந்திராபாத் ரயில் நிலையத்தில், 5 ரயில் என்ஜின்கள், 30 ரயில் பெட்டிகள், பார்சல் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்ததில் முற்றிலும் நாசம் ஆனது. சேதமடைந்த செகந்திராபாத் ரயில் நிலையமும் சரி செய்யப்பட்டு, அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது என அதிகாரி குப்தா கூறினார்.
செகந்திராபாத் ரயில் எரிப்பு சம்பவத்தால், ஆந்திராவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதன் காரணமாக விசாகப்பட்டினம் ரயில் நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டு, மதியம் 12 மணிக்கு பிறகே பயணிகள் மட்டும் சோதனைக்கு பிறகு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட் டனர். இதேபோன்று, விஜயவாடா, குண்டூர், திருப்பதி, கர்னூல், கடப்பா ஆகிய ரயில் நிலையங்களிலும் கூடுதல் ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.