இன்று உலக தந்தையர் தினம்! மகன்-மகள்களுக்காக தம் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணிக்கும் தந்தையரின் அளப்பரிய தியாகத்தை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
வயிறோடு விளையாடும் கருவுடன் உறவாடி மகிழ்வாள் அன்னை! தாயின் உறவு தொப்புள்கொடி பந்தம் என்றால் தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்த ஒன்று.
மழலையின் சிரிப்பில் மயங்கி, மனதைத் தொலைத்து பிள்ளைக்காக அர்ப்பணிப்பது தந்தையின் பாசம்!
குடும்ப நலனுக்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பவர் தந்தை. உலகில் சாதனையாளர்கள் பலரை உருவாக்கிய பெருமை தந்தையரைச் சேரும். கனிவான கண்டிப்பும், மறைமுகமான பாசமும்தான் தந்தையின் அடையாளம்!
பரபரப்பான இன்றைய உலகில், பிள்ளைகளுக்காக ஓடாய்த் தேயும் தந்தையர் எத்தனை எத்தனை… வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் மாதக் கணக்கில்… ஏன், ஆண்டுக்கணக்கில் குடும்பத்தைப் பிரிந்திருப்போர் எத்தனை எத்தனை!
ஓய்வறியாக் கால்கள் ஊன்றுகோலைத் தாங்கும்போதும், பிள்ளையின் அன்பே தஞ்சமெனத் தேடுவது தந்தையின் நெஞ்சம்! மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு அழைத்துச் செல்லும் தந்தையின் தியாகத்தை எதனுடன் ஒப்பிடுவது?