காந்தி நகர்: 100-வது பிறந்த நாளைக் கொண்டாடும் தாய் ஹீராபா மோடியை, குஜராத் காந்தி நகர் இல்லத்தில் நேற்று சந்தித்த பிரதமர் மோடி அவருக்குப் பாத பூஜை செய்து வணங்கினார்.
மேலும், தனது தாய் பற்றியும், ஏழ்மையில் அவருடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் வலைப்பதிவில் மோடி நினைவுகூர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது தந்தை தாமோதர்தாஸ் மோடி, குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்று குடும்பத்தை காப்பாற்றினார். வத்நகரில் சிறிய மண் சுவர் வீட்டில் நான் பெற்றோருடன் வாழ்ந்தேன். மழை பெய்யும்போது வீட்டு கூரையிலிருந்து நீர் சொட்டும் இடங்களில் பாத்திரங்களையும், வாளிகளையும் நாங்கள் வைப்போம். இதுபோன்ற மோசமான நிலையிலும் நெகிழ்தன்மையின் சின்னமாக எனது தாய் இருப்பார். வீட்டுச் செலவுக்காக, சில வீடுகளில் பாத்திரங்களைக் கழுவினார். சர்க்கா சுற்றினார்.
எனது தாய் எளிமையானவர், அற்புதமானவர். தூய்மைப் பணியில் ஈடுபாடுடையவர். எங்கள் தெருவுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தவறாது தேநீர் வழங்குவார்.
பக்கத்து கிராமத்தில் வசித்த எனது தந்தையின் நண்பர் அகால மரணம் அடைந்தார். அவரது மகன் அப்பாஸை என் தந்தை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து, படிக்க வைத்தார். ஈத் பண்டிகையின் போது அப்பாஸுக்குப் பிடித்த சிறப்பு உணவு வகைகளை எனது அம்மா செய்து கொடுப்பார்.
நான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, என் தந்தை மனம் உடைந்து காணப்பட்டார். ஆனால் ‘உன் விருப்பப்படி செய்’ என என்னை வாழ்த்தி அனுப்பியவர் தாய்தான். வீட்டில் இருந்த போது என்னை ‘டேய்’ என கூப்பிட்ட என் தாய், நான் வீட்டை விட்ட சென்றபின் மரியாதையாக கூப்பிடத் தொடங்கினார்.
2001-ல் நான் குஜராத் முதல்வராக பதவியேற்போது, தாய் என்னிடம், “உனது வேலை பற்றி எனக்குப் புரியாது. ஆனால், நீ ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது” என்றார்.
எவ்வளவு நேரம் டி.வி. பார்ப்பீர்கள் என என் தாயிடம் ஒரு முறைகேட்டபோது, “டி.வி.யில் பலர் எப்போதும் சண்டை போடுவதிலேயே குறியாக இருக்கின்றனர். அதனால் செய்திகளை மட்டுமே பார்ப்பேன்” என பதில் கூறினார்.
எந்த தங்க நகைகளையும் என் தாய் அணிந்து நான் பார்த்ததில்லை. சிறிய அறையில் எளிய வாழ்க்கையை அவர் பின்பற்றுகிறார். இவ்வாறு மோடி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளப் பதிவில், “அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே, தங்கள் தாயார் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்று அறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாய் மீதான தங்கள் பாசத்தை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், எனது தாயாரின் உடல்நலன் குறித்து தாங்கள் விசாரித்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். இந்த சிறப்பான நாளில், தங்கள் தாயாருக்கும், தங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.