புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும் முடிவு எடுக்கப்படவில்லை
இதுகுறித்து பரூக் அப்துல்லா நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக எனது பெயரை மம்தா பானர்ஜி முன்மொழிந்தது குறித்து எனது கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசித்தேன். காஷ்மீருக்கும் எனது தீவிர பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். அதனால், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை” என கூறியுள்ளார்.