Fathers Day: "அப்பா சாதி பார்க்கமாட்டார்; இளவரசிகளாகத்தான் வளர்த்தார்" – நெகிழும் கயல்விழி அழகிரி

“அப்பா… நீங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். மத்த பொண்ணுங்களுக்கு அவங்க அப்பால்லாம் எப்படின்னு தெரியாது. ஆனா, எங்களுக்கு நீங்கதான் ஹீரோ. நீங்க இல்லாத உலகத்தை நினைச்சிப் பார்க்கவே முடியாது. நான் நேர்ல இப்படில்லாம் உங்ககிட்ட சொன்னதில்லை. லவ் யூ சோ மச்பா” என்று இதயம் முழுக்க நெகிழ்ச்சியுடன் விகடன் மூலம் மனம் திறந்து பேசுகிறார் கயல்விழி அழகிரி.

தந்தையர் தினத்தையொட்டி “அதிரடி அரசியல்வாதி மு.க அழகிரி, அப்பாவாக எப்படி?” என்று அவரின் மகள், கலைஞரின் பேத்தி, கயல்விழி அழகிரியிடம் கேட்டோம். செம்ம உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

“தொண்டனுக்கு ஒன்னுன்னா அப்பா பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டார். ஆனால், அதையே ’அழகிரி டென்ஷன் பார்ட்டி. அவர்கிட்ட போகவே முடியாது’ன்னு சொல்லி எல்லோரையும் சிலர் நம்பவச்சிட்டாங்க. உண்மையில் அப்பா ரொம்ப ஸ்வீட். அவர், மாதிரி ஒரு மென்மையான குணம்கொண்டவங்களைப் பார்த்ததில்லை. நான், தங்கை அஞ்சுகச் செல்வின்னு முதல்ல பிறந்த ரெண்டு பொண்ணுங்க இருந்தாலும் அப்பாவோட செல்லம் தம்பிதான். 11 வருஷம் கழிச்சு பிறந்ததால அவன்மேல மட்டும் பாசம் அதிகம். ஆனாலும், என்னையும் தங்கையையும் இளவரசிங்களாத்தான் வளர்த்தார். மகள்களோட விருப்பத்துக்கு எதிரா என்னைக்குமே நின்னது கிடையாது.

எங்க வீட்ல ரெண்டு லவ் மேரேஜ் நடந்துச்சு. தங்கை அஞ்சுகச் செல்வி அவளோட சீனியர் விவேக்கைக் காதலிக்கிறேன்னு சொன்னப்போ `நல்ல பையனா? நல்ல குடும்பமா?’ன்னு ரெண்டே வார்த்தைகள் கேட்டு ஓகே சொன்னவர் அப்பா. அதேபோலதான், என் தம்பி காதலையும் ஏற்றுக்கொண்டார். யாரோட காதலுக்கும் தடை சொல்லலை. அப்பா சாதி பார்க்கமாட்டார். தங்கை, தம்பி ரெண்டு பேருமே வெவ்வேறு சாதியில் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. சாதியெல்லாம் அப்பாவுக்குப் பெரிய விஷயமே கிடையாது. அதுபத்தின விவாதமும் மேரேஜ்ல வரலை. இவங்க ரெண்டு பேருக்கும் இப்படின்னா, என்னோட அப்ஸ் அண்ட் டௌன் எல்லாத்திலும் அப்பா கூடவே இருந்திருக்கார். என் குடும்ப வாழ்க்கையிலும் சில சரிவுகள் வந்திருக்கு. `நம்ம பொண்ணு மேல எந்தத் தப்பும் கிடையாது. உனக்கு நான் இருக்கேம்மா. கவலைப்படாதே’ன்னு சொல்லி தைரியமூட்டினார். அப்பா கொடுத்த ஆறுதலால்தான் மீண்டு வந்தேன்.”

alagiri family

அப்பா எப்படி இருக்கிறார்? தி.மு.க-வில் மீண்டும் இணைக்கப்படவில்லையே?

“நல்லாருக்கார். பேரக்குழந்தைகளோடு நேரத்தைக் கழிப்பது, கட்சிக்காரர்களின் வீட்டு விசேஷங்களில் தவறாமல் கலந்துகொள்வது, தொண்டர்களைச் சந்திப்பது என்றிருக்கிறார். அவர் இப்படி இருப்பது சந்தோஷமா இருக்கு. ஆனால், அப்பாவை தி.மு.க யாரோ மாதிரி நடத்துவது வருத்தத்தைத் தாண்டி வேதனை கொடுக்குது. வலிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நல்ல மகனா, நல்ல தொண்டனா இருந்தவரை சொந்தக் கட்சியே ஒதுக்கி வைப்பதை கலிகாலம்னுதான் சொல்லணும். அப்பாவுக்கு நிச்சயம் ஒரு நல்ல வழி கிடைக்கும்ங்கிற நம்பிக்கை இருக்கு.

கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறையும். சூரியனுக்கே அந்த நிலைமைதான். அப்பா எவ்வளவோ தடைகள், தடங்கல்கள் பிரச்னைகளைப் பார்த்துட்டு வந்திருக்கார். அவரது வாழ்க்கை ரோஜாப் படுக்கை கிடையாது. வன்முறை நிறைஞ்ச மதுரையில் 80-கள் காலகட்டத்தில், ’இவன்தான் செஞ்சி முடிப்பான். இவனாலதான் முடியும்’னு முரசொலியைப் பார்க்க அப்பாவை அனுப்பினாங்க தாத்தா. ஏன் வேற யாரையும் அனுப்பல? தாத்தா வச்ச நம்பிக்கையை எங்கப்பா கடைசி வரைக்கும் கட்டிக் காப்பாத்துனாங்க.

அப்பவே, `அழகிரி நீ எதுக்கு தென் மண்டலத்துக்கு மட்டும் அமைப்புச் செயலாளரா இருக்கணும்? தமிழகத்துக்கே ஆகலாம்’னு பேராசிரியர் சொன்னதுக்கு, `அண்ணே… எனக்கு இதுமட்டுமே போதும்’னு சொல்லி, தட்டிக்கழிச்சவர் அப்பா. அந்த ஆசையெல்லாம் அவருக்குக் கிடையாது. சாதி ஆதிக்கம் நிறைஞ்ச தென்மண்டலத்தை இணக்கமா கொண்டுவரப் பாடுபட்டார். கட்சிக்காக உழைச்சவருக்கு இவ்ளோ பெரிய தண்டனை தேவையில்லாத விஷயம். தண்டனையைவிட இது பழிவாங்கல் நடவடிக்கைதான்.”

குடும்பத்துடன்

அப்பா கோபக்காரர்னு சொல்வாங்க. உங்ககிட்ட கோபப்பட்ட தருணம்?

”எல்லா அப்பாவும் பிள்ளைகள் தவறு செய்தால் கண்டிப்பாங்க. அப்பாவும் எங்களைக் கண்டிப்பார், அதேசமயம் நல்லது செஞ்சா ரொம்பவே பாராட்டுவார். அவருக்குக் கோபம் வரும். ஆனால், அடுத்த நிமிஷமே காணாமப்போய்டும். நாங்க எதாவது கேட்டு அவர் கோபப்பட்டார்னா, அந்தப் பொருள் எங்களுக்குக் கண்டிப்பா கிடைச்சிடும்னு அர்த்தம். கேட்டுட்டு நாங்க ஜாலியா இருப்போம். ஐயோ, பிள்ளைங்க மனசு கஷ்டப்படுமேன்னு வாங்கிக் கொடுத்துடுவார். கிரிக்கெட்னா அவருக்கு உயிர். அப்போ மட்டும் ரொம்ப ஹேப்பியாகிடுவார்.

அப்பாவுக்கு வீடு ரொம்ப நீட்டா சுத்தமா இருக்கணும். வெளில போகும்போது லைட்டை ஆஃப் பண்ணிட்டுப் போகணும். எல்லாத்திலும் ரொம்ப பர்ஃபெக்டா இருக்கணும்னு நினைப்பார். அப்போல்லாம், ‘என்னடா அப்பா இப்படிச் சொல்றாரே’ன்னு கஷ்டமா இருக்கும். நாளாக நாளாகத்தான் அந்தப் பழக்கம் ரொம்ப நல்லதுன்னு புரிஞ்சது. `நல்லதோ கெட்டதோ, உண்மையா இருக்கணும். பின்னாடி பேசாம நேரா பேசிடணும்’ என்பதுதான் அவரோட பாலிசி. எங்க வாழ்க்கையிலும் அதைத்தான் கடைப்பிடிக்கிறோம்.”

தந்தையர் தினத்தைக் கொண்டாடுவதுண்டா?

”எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு தந்தையர் தினத்துக்கும் `நான் மூத்த பொண்ணு. நாந்தான் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவேன்’னு சொல்லி காலையில 5.30 மணிக்கே விஷ் பண்ணிடுவேன். சர்ப்ரைஸா பொக்கே எல்லாம் அனுப்பி விடுவேன். இது என்னோட உரிமை. யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.”

தந்தையர் தினம் என்றாலே பெரியப்பாவும் சித்தப்பாவும் வந்துவிடுவார்கள். அவர்கள் குறித்து?

”முத்து பெரியப்பா வீட்டிலேயே ரொம்ப நல்லகுணம். கள்ளம் கபடம் இல்லாமப் பேசுவார். என்மேலயும் தங்கை மேலயும் பிரியமா இருப்பார். அவருக்கு அப்பாவை ரொம்பப் பிடிக்கும். ‘ஆழாக்கு ஆழாக்கு’ன்னு சொல்லித்தான் கூப்பிடுவார். ஃபரெண்ட்ஸ் மாதிரி பழகிக்குவாங்க.

அதேபோல, ஸ்டாலின் சித்தப்பா ரொம்ப நெருக்கம் கிடையாது. பாட்டி வீட்லயே வளந்ததால சித்தப்பா மேல பாசம் உண்டு. ஆனா, சித்தப்பாவைவிட துர்கா சித்தி நல்லா பேசுவாங்க. தமிழரசு சித்தப்பாவை ’குட்டிப்பா குட்டிப்பா’ன்னுதான் கூப்பிடுவேன். மகாபலிபுரம் போவதெல்லாம், அப்போ பெரிய விஷயம். குட்டிப்பாவும் மோகனா சித்தியும் அடிக்கடி எங்க எல்லோரையும் கூப்பிட்டுப் போவாங்க. அதையெல்லாம் இப்போ நினைச்சாலும் குதூகலமாகிடுது.”

தாத்தா கலைஞருக்கு அப்பா கொடுத்த கிஃப்ட் எதுனா ஞாபகம் இருக்கா?

”எங்க அப்பா தாத்தாவுக்கு மகனா கிடைச்சதே பெரிய கிஃப்ட்தான். அதைவிட என்ன கிஃப்ட் வேணும்?”

kayalvizhi alagiri

அப்பாவோடு சினிமாவுக்குச் சென்ற அனுபவம் உண்டா? அப்பா சென்டிமென்ட் காட்சிகள் வரும்போது அழுத அனுபவம்?

” ’அன்புள்ள அப்பா’, ’சந்தோஷ் சுப்ரமணியம்’, ’எம்டன் மகன்’ எல்லாம் பார்த்து அழுதிருக்கேன். இந்த மூணு படத்துல ’அன்புள்ள அப்பா’ படத்தை மட்டும் அப்பாவோடு பார்த்தேன். ஒவ்வொரு வருஷமும் தீபாவளி வந்தாலே மதுரையில்தான் கொண்டாடுவேன். அன்னைக்கு மட்டும் குடும்பத்தோடு நைட் ஷோ அப்பாவோடு சேர்ந்து படத்துக்குப் போவோம். ’சந்தோஷ் சுப்ரமணியம்’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். கண்டிப்பா இருந்தாலும் உள்ளுக்குள்ள அப்பாவுக்கு எவ்ளோ பாசம் இருக்குன்னு புரிய வச்ச படம்.”

அப்பா குறித்து நெகிழ்ச்சியான அனுபவங்கள்?

”நான் கர்ப்பிணியா இருந்தப்போ காய்ச்சல் வந்து முனகிக்கிட்டே படுத்துக்கிட்டிருந்தேன். திடீர்னு யாரோ என் காலைப் பிடிச்சுவிட்ட மாதிரி இருந்துச்சு. கண்ணைத் திறந்து பார்த்தா ‘நீ தூங்கும்மா தூங்கு’ன்னு சொல்லி அப்பா காலைப் பிடிச்சு விட்டுட்டு இருந்தாங்க. அவரோட பாசத்தை இப்போ நினைச்சாலும் கண்ணெல்லாம் கலங்குது.

அதேபோல, சென்னைல இருக்கும்போது எனக்கு தலைல அடிப்பட்டுடுச்சு. அப்பாகிட்ட சொல்லிட்டு ஹாஸ்பிட்டல் போய்ட்டேன். தையல் எல்லாம் போட்டுட்டு வீட்டுக்கு வந்தா, அப்பா நிக்கறார். மதுரையிலிருந்து 4 மணிநேரத்துல சென்னை வந்துட்டார். தையல் போட்ட வலியெல்லாம் அப்பா வந்து நின்னதுல மறந்துடுச்சு. பாசத்தையெல்லாம் செயல்லதான் காட்டுவார் அப்பா.”

alagiri

மகளாகப் பெருமைப்பட்ட தருணம்?

”அப்பா அமைச்சரா பதவியேற்கும்போது சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவரோட உழைப்புக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரமா பார்த்துப் பெருமைப்பட்டேன். மத்திய அமைச்சரா ஆகணும்னெல்லாம் அப்பாவுக்கு விருப்பமில்லை. அந்தப் பதவி திணிக்கப்பட்டதுதான். ஆனாலும், ரொம்பச் சிறப்பா பண்ணுனாங்க. அந்த டைம்ல மம்தா பானர்ஜியே அப்பாவைப் புகழ்ந்தாங்க.

எத்தனையோ பேர் மிசாவுக்குப் போனாங்கன்னுதான் எல்லோருக்கும் தெரியும். உண்மையில் வெளியிலிருந்து தி.மு.க-வைக் கட்டிக்காப்பாற்றியவர்களில் அப்பா முக்கியமானவர். ஆனால், அது மறுக்கப்பட்ட; மறைக்கப்பட்ட உண்மை.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.