‘Virata Parvam’ படத்தின் ப்ரோமோஷன் போது சாய் பல்லவி `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்தும் பசுவை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் ஒருவர், கும்பலால் தாக்கப்பட்டது குறித்தும் பேசியிருந்தார். அவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சாய் பல்லவி தன்னிலை விளக்கம் ஒன்றை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அதில் பேசியிருப்பது…
“இதற்கு முன்பு நான் பேசியதற்கு விளக்கம் சொல்வது இதுவே முதல் முறை. நான் மனம் திறந்து பேசுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கிறேன். என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்கிற பயம் இருக்கிறது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, `நீங்கள் இடதுசாரியா? வலதுசாரியா?’ என்பதே. நான் நடுநிலை என தெளிவாக நம்புவதாக சொன்னேன். நமது நம்பிக்கையின் பொருட்டு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முன்பு நாம் நல்ல மனிதராக இருப்பது தான் முக்கியம் எனச் சொன்னேன்.
அந்தப் பேட்டியில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன். இரண்டும் அந்தந்த நேரத்தில் என்னை அதிகம் பாதித்த விஷயங்கள். பல நாட்கள் அவற்றின் தாக்கம் என்னிடம் இருந்தது. `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பார்த்து விட்டு அந்த இயக்குனரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.”
மேலும் “அந்தப் படம் என்னை மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்கியது என்பதை அவரிடம் சொன்னேன். காஷ்மீரில் நடந்த இனப்படுகொலையை அதுவும் தலைமுறைகள் தாண்டி பாதிப்பை உணரும் ஒன்றை நான் சிறுமைப்படுத்தவில்லை. அதே போல கோவிட் நேரத்தில் நடந்த கும்பல் படுகொலை சம்பவத்தை ஒருபோதும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த வீடியோ பார்த்தது என்னைப் பல நாட்கள் உலுக்கியது. வன்முறை எந்தக் காரணத்தினால் நிகழ்ந்தாலும், எந்த மதத்தின் பெயரால் நிகழ்ந்தாலும் அது மிகப்பெரிய பாவம். இவை தான் நான் சொல்ல விரும்பியது.
இன்றைக்கு சமூக வலைதளங்களில் பலர் கும்பல் படுகொலையை ஆதரித்து பேசுவதைப் பார்க்க முடிகிறது. யாருக்குமே ஒருவரின் உயிரை எடுப்பதற்கு உரிமை கிடையாது. மருத்துவத்துறை என்கிற பின்புலத்தில் இருந்து பார்க்கும் போது எல்லா உயிரும் சமம் தான். எல்லா உயிரும் முக்கியம் தான்.” என விளக்கம் அளித்துள்ளார்.