இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் பங்கு பெறுகின்றனர்.
இந்த நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இனி ஒவ்வொரு முறையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும்.
இந்த சுடர் ஓட்டம் செஸ் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை நேரமின்மை காரணமாக செஸ் ஒலிம்பியார் சுடர் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
செஸ் ஒலிம்பியாட் சுடர் தொடர் ஓட்டத்தை நடத்தும் முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கவுள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர் கோவிச் செஸ் ஒலிம்பியாட் சுடரை பிரதமர் மோடியிடம் முறைப்படி ஒப்படைப்பார். அதனைத் தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம், பிரதமர் மோடி அந்த ஜோதியை ஒப்படைப்பார். செஸ் ஒலிம்பியாட் சுடர் தொடர் ஓட்டம், இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் 40 நாட்களுக்கு வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.