"`விக்ரம்' வெற்றிக்கு நடுவே `ஜன கண மன' படத்திற்கு வரவேற்பு என்பது…"- இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி

பிற மொழிகளின் பேன் இந்தியா படங்கள் தியேட்டரில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது, சத்தமே இல்லாமல் வெளியான `ஜன கண மன’ மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் கேரளாவில் ஹிட்டடித்தது. ஆனால், பிற மாநிலங்களில் காட்சிகள் குறைவாகவே ஒதுக்கப்பட்டன. தற்போது படம் ஓ.டி.டி-யில் வெளியானதைத் தொடர்ந்து அதன் பல காட்சிகள் விவாதிக்கப்பட்டு வைரலாகி வருகின்றன. படம் குறித்து, அதன் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியிடம் விவாதித்தோம்.

‘ஜன கண மன’ படத்திற்கு தமிழகத்திலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதே?

“படம் பார்த்துவிட்டு ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் தமிழக மக்கள் பாராட்டுவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு தமிழ் கொஞ்சமாகப் பேச மட்டும் வரும். படிக்கத் தெரியாது. அதனால், தமிழர்களின் பாராட்டுகளை ட்ரான்ஸ்லேட் செய்து படித்து வருகிறேன். தினம்தினம் படத்தைக் கொண்டாடுவது சந்தோஷமாக இருக்கு. தமிழ் மக்களுக்கு ரொம்ப நன்றி.”

உங்களின் முதல் படமான ‘குயின்’ தமிழில் ’ஃப்ரண்ட்ஷிப்’பாக ரீமேக் செய்யப்பட்டது. ’ஜன கண மன’ படத்தை அனைத்து மொழியிலும் வெளியிடவேண்டும் என்பது யாருடைய முடிவு?

டிஜோ ஜோஸ் ஆண்டனி

“இப்போ சினிமாத்துறை ரொம்பவே மாறியிருக்கும்போது எதுக்கு ரீமேக் பண்ணனும்? ’கேஜிஎஃப் 2 ’ மலையாளத்திலும் இருக்கு. இந்தியிலும் இருக்கு. அப்போ, ரீமேக் தேவையில்லையே? என்னுடைய முதல் படம் ’குயின்’ வெளியானபோது இருந்த சூழல் வேறு. இப்போது, அப்படியில்லை. ரீமேக்கில் எனக்கும் அவ்வளவா இன்ட்ரஸ்ட் கிடையாது. ’ஜன கண மன’ ஒரு பேன் இந்திய சினிமாதான். மலையாள சினிமாவிலிருந்து ஒரு இந்தியன் சினிமா வரவேண்டும். அதனால்தான், படத்திற்கு ‘ஜன கண மன’ என்று தலைப்பு வைத்தோம். பல மொழி நடிகர்களும் நடிக்கவேண்டும் என்றே தமிழ் நடிகர்களையும் இணைத்தோம். படம் இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளைப் பேசியுள்ளதால் நான்தான் தயாரிப்பாளர் சுப்ரியா மேடத்திடம் எல்லா மொழியிலும் வெளியிடலாம் என்றேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஓகே சொன்னார்.

குறிப்பாக, வெளியான அனைத்து மொழிகளிலும் இது ஒரு மலையாளப் படம் என்ற நினைப்பு வராத அளவிற்கு டப்பிங் சிறப்பாகச் செய்தார்கள். தமிழில் இயக்குநர் பாலாஜிதான் ஒருங்கிணைத்து பொருத்தமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களையும் தேர்வு செய்து பேச வைத்தார். ’தமிழ்ப் படம் பார்த்த மாதிரியே இருந்துச்சு’ன்னுதான் எல்லோரும் சொல்றாங்க. பாலாஜிக்கு ரொம்ப நன்றி. இது ‘விக்ரம் வேதா’ மாதிரியான ஒரு படம். யாரு ஹீரோ, யாரு வில்லன் என்பது தெரியாது. அது கற்பனை. இதில், உண்மை சம்பவங்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டோம்.”

பெங்களூரின் ராமநகராவை கதை நிகழும் களமாக தேர்ந்தெடுத்ததற்கு எதுவும் குறிப்பிடத்தகுந்த காரணங்கள் இருக்கின்றனவா?

“கேரளாவில் என்கவுன்ட்டர்களை நாங்கள் பார்த்ததில்லை. செய்திகளைக் கேள்விப்பட்டதும் இல்லை. ஆனால், என்கவுன்ட்டர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஹைதராபாத், குஜராத் உள்ளிட்ட இடங்களில்தான் நடக்கின்றன. அதனால்தான், அந்த மாதிரி இடமாக இருக்கவேண்டும் என்று பெங்களூரைத் தேர்வு செய்தோம். அங்கு தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழி பேசுபவர்களும் வசிக்கிறார்கள். மற்றபடி ராமநகராவை கதைக்களமாகக் காட்டியதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. சும்மா ஒரு பேர் வேண்டும் என்று காட்டினோம்.”

சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அல்லது சாட்சிகளை மிரட்டி ரவுடிகள் விடுதலை ஆவதாலும் என்கவுன்ட்டர் செய்வதாகப் போலீஸ் தரப்பில் ஒரு விவாதம் வைக்கப்படுகிறது. போலீஸ் என்கவுன்ட்டர்கள் குறித்து உங்கள் பார்வை என்ன?

ஜன கண மன

”யாரை யாரு என்கவுன்ட்டர் பண்ணாலும் தப்புதான். நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அஜ்மல் கசாப் வழக்கில் நீதித்துறைதான் நீதி வழங்கியது. அதையே, போலீஸ் வழங்கியிருந்தால் தப்பு. பல மாநிலங்களில் நிறைய என்கவுன்ட்டர்கள் நடக்கின்றன. குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அந்த என்கவுன்ட்டருக்கெல்லாம் காரணமே கிடையாது. யார் தவறு செய்தார்கள் என்று எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிப்பதில்லை.”

’ஜன கண மன’ பார்த்த வலதுசாரி தலைவர்கள் யாராவது தங்கள் கருத்தையோ விமர்சனத்தையோ உங்களிடம் பகிர்ந்து கொண்டார்களா?

“அது மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால், படத்தை வரவேற்க நிறைய பேர் இருக்காங்கன்னா விமர்சனம் செய்யவும் நாலுபேர் இருப்பாங்க. விமர்சனங்களை நான் பெருசா கண்டுக்கிறதில்லை. நிறைய கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ்காரர்கள் பாராட்டினார்கள். காங்கிரஸில் டி.என் பிரதாபன் எம்.பியும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரஹீம் எம்.பியும் பாராட்டினார்கள். பா.ஜ.க, காங்கிரஸ் என எந்தக் கட்சிக்கும் நான் எதிரானவன் இல்லை. கேரளாவில் அடித்தே கொல்லப்பட்ட மது பிரச்னையையும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். எல்லா பிரச்னைகளையும் பேசவேண்டும். அதுதான் நோக்கமாக இருந்தது.

சமீபத்தில் ‘விக்ரம்’ பார்த்தேன். செம்ம சூப்பராக இருந்தது. எங்கள் படம் இதுபோன்ற பெரிய பட்ஜெட் படம் இல்லை. ஆனாலும், இதற்கு நடுவே இவ்வளவு பாராட்டு கிடைத்திருப்பது பெரிய விஷயம்.”

படத்தில் பிரித்விராஜ் ஃப்ளாஷ்பேக் என்பது இரண்டாவது பாகத்துக்கான லீடா?

“கண்டிப்பா ’ஜன கண மன’ இரண்டாம் பாகம் வருகிறது. இது ஜனங்களுக்கான படம். அதனால், ஒரேயொரு தடவை வந்தால் மட்டும் போதாது. ’பார்ட் 2’ கட்டாயம் வரும்.”

பிரித்விராஜ்

ஐதராபாத் போலீஸ் என்கவுன்ட்டர் போலியானது என்று விசாரணைக்குழு கூறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? குறிப்பாக, உங்கள் படத்தில் என்கவுன்ட்டர் செய்யும் காவல்துறை அதிகாரிக்கு சஜன் குமார் என்ற பெயர் ஐதராபாத் என்கவுன்ட்டருக்குத் தலைமை தாங்கிய கமிஷனர் சஜனாரை நினைவூட்டுகிறதே?

“’ஜன கண மன’ பார்க்கும்போது போலி என்கவுன்ட்டரைப் பார்த்துட்டு உங்களுக்கு ஒரு ஷாக் கிடைச்சிருக்கும்லயா, அதே ஷாக்தான் இப்போ ரியலாவே கிடைச்சிருக்கு. சஜனார் பெயரை வைக்கவேண்டும் என்று எந்த நோக்கமுமில்லை. ஒரு பேரு வைக்கணும்னு வைத்தோம். ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் உண்மைப் பெயர். ஆனால், படத்தில் வித்யாதானே? எங்களுக்கு அந்த விஷயம் மக்களுக்குத் தெரியணும். அவ்ளோதான். குமார் என்பது போன்ற நேஷனல் பெயர் வேண்டும். அதனால், சஜன் குமார் என்று வைத்தோம்.”

பேன் இந்தியா படங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் மலையாளத்தில் ஏன் அப்படியொரு முயற்சி இல்லை? பட்ஜெட் இல்லையா அல்லது தயக்கமா?

”பட்ஜெட் மட்டுமே இந்தியப் படம் இல்லை. நல்ல தரமான கதைகளும் மக்களுக்கு நெருக்கமான படங்களும் கொடுக்கணும். அதுதான், பேன் இந்தியன் படம். மலையாளத்தில் ‘லூசிஃபர்’ பெரிய பட்ஜெட் படம்தானே? ‘கும்பளங்கி நைட்ஸ்’ எல்லாம் இந்தியன் சினிமாதான். பல மொழிகளில் பார்த்தார்கள். தெலுங்கு, கன்னடா, தமிழ், இந்தியில் வருவது மட்டுமே பேன் இந்தியா இல்லை. மராத்தியிலும் வருகிறது. ’சாய்ராட்’ எல்லாம் பேன் இந்தியன் படம்தான். பொதுவாக, பெரிய பட்ஜெட் படம் என்றாலே பேன் இந்தியா என்று நினைக்கிறார்கள். அது தப்பு. பட்ஜெட் இல்லைன்னாலும் தரமான படங்களையே பேன் இந்தியா படங்களாக்க முடியும். மலையாள இயக்குநர்களும் அப்படித்தான் எடுக்கிறார்கள்.”

படத்தில் ’சட்டம் எல்லாருக்கும் சமமாய்த்தானே இருக்கவேண்டும்’ எனக் குரல் எழுப்பும் பிரித்விராஜ் இறுதிக்காட்சியில் ’உனக்கு தண்டனை தரப்போவது நான்தான்’ எனச் சொல்வது அதுவரை அவர் பேசிவந்த அரசியலுக்கு முற்றும் முரணானது. ஓர் இயக்குநராக இந்த இரண்டில் நீங்கள் வலியுறுத்துவது எது?

“இருவருக்குமான ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்காகவே அப்படி வைத்தோம். அதுதான், ‘ஜன கண மன பார்ட் 2’. அதில், முற்றிலும் வித்தியாசமான ஒரு அப்ரோச் இருக்கும். நிஜத்தில் நீதித்துறை கொடுக்கும் தீர்ப்புதான் இறுதித்தீர்ப்பு.”

மம்தா மோகன்தாஸுடன் டிஜோ ஜோஸ் ஆண்டனி

போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் திசைதிருப்பும் அரசியலை நீங்கள் பேச நினைத்தது சரிதான். ஆனால், மாணவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பார்கள் என்கிற தொனியில் காட்டியிருப்பது ஜே.என்.யு உள்பட நாடு முழுவதும் போராடி வந்த; வரும் மாணவர்களை அரசியல் தெளிவற்றவர்கள் எனப் படம் பார்ப்பவர்கள் நினைத்துவிட வழி வகுத்துவிடாதா?

”ஜே.என்.யு ஸ்டூடண்ட்ஸை மையப்படுத்தி எடுக்கவில்லை. பார்ப்பவர்களுக்கு அப்படித் தோன்றும். அவ்ளோதான். ஆனால், மாணவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவது இயல்புதானே? அந்த வயதில் ரொம்ப துடிப்பாகத்தானே இருப்பார்கள்? அதேநேரம், படத்தில் சஜன் குமார்தான் வில்லன் எனத் தெரியவரும்போது மாணவர்கள் ஜீப்பை உடைப்பார்களே?”

முதல் படமான ‘குயின்’ உண்மைக்கதை. அதேபோல், ‘ஜன கண மன’ உண்மைச் சம்பவங்களின் ஆவணம். உங்கள் அடுத்தப் படமும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தியதா?

”நிச்சயம் மூன்றாவது படம் அப்படிக் கிடையாது. அதில் நீதிமன்றக் காட்சிகளே கிடையாது. வித்தியாசமான கதைக்களம். எல்லா படத்திலும் உண்மையைக் காட்டவேண்டும் என்று நினைப்பது தவறு. சினிமா ஒரு மேஜிக்தானே?”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.