நடுவானில் பறவை மோதியதால் தீப்பிடித்த விமானம் – அவசரமாக தரையிறக்கம்!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் பறவை மோதியதால், தீப்பிடித்து எரிந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு, ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று பகல் 12 மணியளவில் புறப்படத் தயாரானது. அந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கியதுடன், தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறவை மோதியதால், ஒரு இன்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தில் தீப்பற்றியதை பார்த்த உள்ளூர்வாசிகள் அதிர்ச்சிய அடைந்தனர். அவர்கள் உடனடியாக மாவட்ட மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, டெல்லி செல்லும் விமானம் அவசரமாக பாட்னா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 185 பயணிகளும் பத்திரமாக இறங்கினர். உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு பெரும் விமான விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக பாட்னா மாவட்ட ஆட்சியர் கூறுகையில், டெல்லி சென்ற விமானத்தில் இன்ஜினில் தீப்பிடித்ததால், பாட்னாவுக்கு மீண்டும் திரும்பியது. இன்ஜினில் ஏற்பட்ட தீயை உள்ளூர் மக்கள் பார்த்து, விமான நிலைய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த 185 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.

இதற்கிடையே, மாற்று விமானத்தில், தலைநகர் டெல்லிக்கு பயணிகள் செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.